மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம்: தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மருது சகோதரர்கள் 1801ம் ஆண்டில் இதே நாளில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் இன்று கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் ”சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலை சிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர் நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி: “வீரத்திற்கும், விசுவாசத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த மருது சகோதரர்களின் 224ம் நினைவு நாள் இன்று. வெள்ளையர்களுக்கு எதிராக முதல் விடுதலைப் போரை நடத்தியதுடன், அவர்களை விரட்டியடித்த பெருமை மிக்கவர்களான மருது பாண்டியர்களின் நினைவு நாளில் அவர்களின் வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். நாட்டைக் காப்பதில் அவர்களின் தியாகத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் 1785 முதல் 1801 ஆண்டு வரை நம் மண்ணை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கி வீறுகொண்டு போராடினார்கள். பீரங்கி போன்ற அதி நவீன ஆயுதங்களுடன் போரிட வந்த வெள்ளையர்களை வேல் கம்பும், வீச்சரிவாளும் வைத்து ஓட ஓட விரட்டிய பெருமை கொண்டவர்கள் மருது சகோதரர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801ம் ஆண்டு சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். சதித்திட்டங்கள் மூலம் சிவகங்கையை சுற்றி வளைத்த ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர். மருது சகோதரர்களை பிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் காளையார் கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என்று ஆங்கிலேய படைகள் அறிவித்தன.

ஆசை, ஆசையாக கட்டிய கோபுரம் இடிக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால் இறுதியாக ஆங்கிலேய படைகளிடம் மருது சகோதரர்கள் சரணடைந்தனர். அதன் பின்னர் அவர்களை திருப்பத்தூரில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். 1801ம் ஆண்டில் மருது பாண்டியர்கள் நடத்தியது தான் வெள்ளையர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் ஆகும்.

அவர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த நாள் தான் மண்ணுக்காக உழைக்க நாம் உறுதியேற்றுக்கொள்ள வேண்டிய நாளாகும். மருது பாண்டியர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்: “ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டில் இருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவு தினம் இன்று.

மக்களோடு, மக்களாக வாழ்ந்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை வழங்கியதோடு, தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் காத்திட தங்களின் இறுதி மூச்சு வரை போராடி ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்” என்று தினகரன் கூறியுள்ளார்.

முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர்: “இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த சிவகங்கை சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள், மா வீரர்கள் பெரிய மருது, சின்ன மருது ஆகியோர் தியாகம் செய்த 224-வது ஆண்டு நினைவு நாளான இன்று அவர்களை போற்றி வணங்குவோம், வாழ்க மருது சகோதரர்களின் புகழ்” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.