ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலும் டிரேடிங் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நகர்வாக, தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து, தனது சொந்த ஊர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் என்ற செய்திகள் தீயாய் பரவி வருகின்றன. ஐபிஎல் 2025 ஏலத்தில், குஜராத் அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்ட வாஷிங்டன் சுந்தரை, அதே விலைக்கு CSKவுக்கு டிரேடிங் செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக அஸ்வின் யூடியூப் சேனலில் செய்தி வெளியாகி உள்ளது.
Add Zee News as a Preferred Source

அஸ்வினின் இடத்தில் சுந்தர்?
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், CSK அணியால் ரூ.9.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. 9 போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய அவர் பேட்டிங்கிலும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல்கள் வந்த நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின். அடுத்த சில ஆண்டுகளுக்கு வெளிநாட்டு டி20 லீக்குகளில் கவனம் செலுத்த போவதாகத் தெரிவித்தார்.
அஸ்வினின் ஓய்வால், CSK அணியின் சுழற்பந்து வீச்சுத் துறையில் ஒரு பெரிய வெற்றிடம் உருவானது. அனுபவம் வாய்ந்த ஒரு ஆஃப்-ஸ்பின் மற்றும் ஆல்-ரவுண்டரை தேடி வந்த CSK அணிக்கு, வாஷிங்டன் சுந்தரின் வருகை ஒரு சரியான தேர்வாக அமைந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், சேப்பாக்கம் மைதானத்தின் சூழலை நன்கு அறிந்தவர் என்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அவருக்கு கூடுதல் பலமாக அமையும்.
குஜராத் அணியில் நீக்கம் ஏன்?
குஜராத் டைட்டன்ஸ் அணியில், ரஷீத் கான் மற்றும் ராகுல் திவாதியா போன்ற பல முன்னணி ஆல்-ரவுண்டர்கள் இருந்ததால், வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஐபிஎல் 2025 சீசனில், அவர் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 133 ரன்களையும், 2 விக்கெட்டுகளையும் மட்டுமே கைப்பற்றினார். திறமையான வீரராக இருந்தும், அணியில் அவருக்கான சரியான பங்களிப்பை கொடுக்க முடியாததே, குஜராத் அணி அவரை டிரேடிங் செய்ய முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ஆடிய சன்ரைசன்ஸ் அணியிலும் இதே போல பல போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக, 2025ம் ஆண்டு சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, CSK அணி பெரும் சரிவை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு, 2026ல் மீண்டும் கோப்பையை வெல்லும் நோக்கில், அணியை முழுமையாக புனரமைக்கும் பணியில் CSK நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இளம் இந்திய வீரர்களை மையமாக கொண்டு, எதிர்காலத்திற்கான ஒரு வலுவான அணியை உருவாக்கும் இந்த திட்டத்தின் ஒரு முக்கியப் படியாகவே, வாஷிங்டன் சுந்தரின் வருகை பார்க்கப்படுகிறது. இந்த டிரேடிங் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் பட்சத்தில், ஐபிஎல் 2026ல் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் மஞ்சள் ஜெர்சியில், சேப்பாக்கம் மைதானத்தில் வலம் வருவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
About the Author
RK Spark