கர்னூல்: ஆந்திராவின் கர்னூல் அருகில் சொகுசுப் பேருந்து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைதராபாத்தை சேர்ந்த அனுஷா ரெட்டியும் ஒருவர்.
இதுகுறித்து அனுஷாவின் தந்தை கூறுகையில், “என் மகளுக்கு பெங்களூரு வேலை கிடைக்காமலேயே இருந்திருக்கலாம். வியாழக்கிழமை இரவு பேருந்து நிலையம் வந்து எங்கள் மகளை வழியனுப்பி வைத்தோம். அது வழக்கமான பிரியாவிடையாக இருந்தது. ஆனால் அது இப்போது எங்கள் வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு கனவாக மாறிவிட்டது” என்றார்.
அனுஷாவின் தாயும் வலியும் அதே அளவு கூர்மையானது. “தீபாவளி விடுமுறைக்கு வந்த எனது மகளை இன்னும் ஓரிரு நாள் தங்குமாறு கூறினேன். ஆனால் அவள் ஏற்கவில்லை” என்றார்.
பெங்களூருவில் 5 மாதங்களுக்கு முன் தனது வாழ்க்கையை தொடங்கிய மேக்நாத்தும் விபத்தில் இறந்தவர்களில் ஒருவர். விபத்துப் பகுதிக்கு வந்திருந்த அவரது தாயால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “எனது மகனுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருக்க கூடாது. அவன் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்” என்று அவர் கதறினார்.
தெலங்கானா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் கூறுகையில், “பேருந்து நிறுவனம் மற்றும் ஓட்டுநர் மட்டுமே இந்த விபத்துக்கு காரணம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களே இழப்பை ஈடு செய்ய
வேண்டும்” என்றார்.