Bison: “என்னிடம் அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்; இன்னும் மூர்க்கமாக வேலை செய்வேன்" – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.

பைசன் வெற்றிவிழா
பைசன் வெற்றிவிழா

இந்த நிகழ்வில் பேசிய பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “என் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி. இந்த படத்துல நடித்த எல்லோரும் என்னை முழுவதும் நம்பி, அவர்களின் வாழ்க்கையை என்னிடம் கொடுத்தார்கள்.

எனவே, நடிகர்களிடம் அரசியலைப் புரியவைத்து, உணர்வுகளைக் கடத்தி வேலை வாங்க வேண்டியிருந்தது. அதற்கே பெரும் உழைப்பு தேவைபட்டது.

அதனால், படம் தொடங்குவதற்கு முன்பே துருவ் விக்ரமிடம், `என்னை நம்பி முழுவதுமாக உன்னை ஒப்படைத்தால் இந்தப் படத்தை எடுக்கலாம் இல்லை என்றால் வேண்டாம்’ என்றேன்.

இரண்டு வருடம் இந்தப் படத்துக்காக காத்திருந்தான். அப்படித்தான் துருவ் இந்தப் படத்துக்குள் வந்தான். அந்த நம்பிக்கையால் ஒரு மேஜிக் நடக்கும். அதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் உணர்கிறேன்.

இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த உழைப்பைப் பார்த்த பலர் என்னை சைக்கோ எனக் கூறி விலகிச் சென்றிருக்கிறார்கள்.

உழைப்பு வெற்றிபெற்றால் பாராட்டுவார்கள். இல்லையென்றால் சைக்கோ என்பார்கள். ஆனால், சீனியர் நடிகர்களுக்குதான் என் உழைப்பு புரிந்தது. அதில் நடிகர் பசுபதி, லால் சார், அமீர் சார் இந்த மூன்று பேரும் முக்கியமானவர்கள்.

பைசன் வெற்றிவிழா: நடிகர் பசுபதி – இசையமைப்பாளர் நிவாஸ்

நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் இறங்கி வந்து என் உழைப்பை ரசித்து, சுதந்திரம் கொடுத்தார்கள். ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது பசுபதி சாருக்கு கடுமையான காய்ச்சல்.

அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இந்தப் படத்தில் அக்கா கதாப்பாத்திரத்துக்கு பலரிடம் கேட்டேன். இறுதியாகதான் ரஜிஷா விஜயனிடம் பேசினோம்.

அனுபமாவிடம் நாங்கள் சொன்ன கதை வேறு. ஆனால், ரஞ்சித் அண்ணனுடன் கதை விவாதம், கதை வளர்ச்சி என அரசியலை நோக்கி நகர்ந்தது. அதன்பிறகும் அனுபமாவிடம் கதை மாற்றம் குறித்து தெரிவித்தோம். அவர் சம்மதித்தார்.

நான் இணையப் பக்கத்தில் எழுதும்போது அறிமுகமான கேமரா மேன் எழிலன் 15 ஆண்டுகளாக என்னுடன் பயணிக்கிறார். என்னை எந்த நிபந்தனையும் இல்லாமல் நேசிக்கும் இவரைப் போன்ற பலரை நான் பெற்றிருக்கிறேன்.

இந்தப் படத்துக்காக திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கபடி வீரர்கள் பலரும் இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள். அவர்கள்தான் துருவுக்கு உழைப்பின் சுவையை காண்பித்துக்கொடுத்தவர்கள்.

எனக்கு கிடைத்த எடிட்டர் சக்தி, இசையமைப்பாளர் நிவாஸ் என என்னைப் புரிந்துகொண்டு, என் பார்வைக்கேற்ற வகையில் பணியாற்றினார்கள்.

பைசன் வெற்றிவிழா: நடிகை ரஜிஷா விஜயன் - நடிகர் அமீர்
பைசன் வெற்றிவிழா: நடிகை ரஜிஷா விஜயன் – நடிகர் அமீர்

`பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு நானும் ரஞ்சித் அண்ணனும் அதே மகிழ்வோடு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். அதற்கு காரணம் எங்கள் இருவருக்கு மத்தியில் இருக்கும் சகோதர உறவுதான்.

ராம் சாருக்குப் பிறகு ஒருவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என நான் உழைக்கிறேன் என்றால் அது ரஞ்சித் அண்ணனிடம்தான்.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் நானே எழுதினேன். அதற்கு காரணம் பாடலாசிரியர் யுகபாரதி அண்ணன்.

அவர்தான், `படத்துக்கு ஒரு பாட்டு எழுதுவதைவிட எல்லாப் பாட்டையும் நீயே எழுது. கதையின் உணர்வை நீ அப்படியே பதிவு செய்யலாம்’ என்றார். அந்த நம்பிக்கைதான் நான் பாடல் எழுதக் காரணம்.

மனத்தி கணேசன் என்ற ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் சொல்ல வரும் கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நான் ஏன் இப்படியான படங்களையே எடுக்கிறேன் எனக் கேள்வி கேட்கிறீர்கள்.

பைசன் வெற்றிவிழா
பைசன் வெற்றிவிழா

உங்களைக் கொண்டாட்ட மனநிலையில் வைத்திருக்க ஆண்டு முழுவதும் அவ்வளவு படங்கள் வரும்போது, என்னையும் அந்த கும்பலுக்குள் ஏன் தள்ளிவிட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

நான் பார்த்த, அனுபவித்த கதைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் யாரையும் பகையாக நினைத்ததில்லை. என்னுடைய கருத்தை மாற்றிவிடலாம் என நினைக்காதீர்கள். அது மிகவும் கடினம்.

அதற்காக நான் இந்தத் துறைக்கு வரவில்லை. நான் எடுக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும். ஏனென்றால் நான் சந்திக்கும் மனிதர்கள், கேட்கும் கதைகள் அப்படியானவை.

நான் சாதிப்படம் எடுக்கவில்லை. சாதிக்கு எதிரான படம் எடுக்கிறேன். உங்களுடைய கேள்வி என்னைக் காயப்படுத்துகிறது.

எனவே, இனி என்னிடம் அப்படியான கேள்விகளைக் கேட்காதீர்கள். என்னிடம் இப்படியான கேள்விகள் மூலம் என் களத்தைப் பறிக்க நினைத்தால் நான் இன்னும் மூர்க்கமாக உழைப்பேன்.

என்னுடன் பணியாற்றியவர்களிடம் கேட்டுப்பாருங்கள். தொடர்ந்து இதுபோன்ற கேள்விகள் எழுந்தால், நான் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்க விரும்புவேன்.

என்னுடைய படங்களை மட்டும் தொடர்ந்து இயக்கிக்கொண்டிருப்பேன். என்னை அப்போதும் இதே அன்புடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.