தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான சினேகனின் தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புதுகாரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று (அக்.27) காலமானார். அவருக்கு வயது 102.
சினேகன் தந்தை மறைவுக்குப் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் திரு. சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.