சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நவீன்குமார், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நிவேதிதா, ரயில்வேயில் வேலைப்பார்த்து வருகிறார். நவீன்குமாரின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது நிவேதிதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சிறுவன் லவின் இறந்து கிடந்தார். அதைப்பார்த்த நவீன்குமாரின் பெற்றோர், சத்தம் போட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு நிவேதிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீஸார், அங்கு வந்தனர். சிறுவன் லவினின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் நவீன்குமார் இல்லாததால் அவர் எங்கு சென்றார். லவினுக்கும் நிவேதிதாவுக்கும் என்ன நடந்தது என போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் வில்லிவாக்கம் – கொரட்டூர் ரயில் நிலையங்களுக்கிடையே இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பெரம்பூர் ரயில்வே போலீஸார் அங்கு சென்று சடலமாக கிடந்த இளைஞரின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் அருகில் உடைந்த நிலையில் கிடந்த செல்போனை மீட்ட போலீஸார், அதன் மூலம் இளைஞரின் அடையாளத்தை கண்டறிந்தபோது உயிரிழந்தது நவீன்குமார் என்று தெரியவந்தது. உடனடியாக இந்தத் தகவலை ரயில்வே போலீஸார், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். அதன்பேரில் திருமங்கலம் போலீஸார், நவீன்குமார், நிவேதிதா ஆகியோரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து திருமங்கலம், ரயில்வே போலீஸார் ஆகியோர் கூறுகையில்,
“மத்திய அரசு அதிகாரியான நவீன்குமார், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் முதலீடு செய்த பணத்தை இழந்திருக்கிறார். கடன் சுமை, மன உளைச்சலால் நவீன்குமார், சிரமப்பட்டு வந்திருக்கிறார். அதனால் உயிரை மாய்த்துக் கொள்ள நவீன்குமார் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து நிவேதிதாவிடம் நவீன்குமார் கூறியிருக்கிறார். இதையடுத்து சம்பவத்தன்று தன்னுடைய மகனான லவினின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் நவீன்குமார்.

பின்னர் மனைவி நிவேதிதாவின் கழுத்தையும் அறுத்திருக்கிறார். அப்போது நிவேதிதா உயிருக்குப் போராடியிருக்கிறார். அதைப் பார்க்க முடியாத நவீன்குமார் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். பின்னர்தான் அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்திருக்கிறார். நிவேதிதாவிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. நிவேதிதா, நவீன்குமாரின் செல்போன்களை ஆய்வு செய்து வருகிறோம். இவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளோம். விசாரணைக்குப்பிறகுதான் முழு விவரம் தெரியவரும்” என்றனர்.
சென்னை அண்ணாநகரில் ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிருக்கு போராடும் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.