சிவகங்கை: “அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ வெள்ளி கவசம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியது: “விஜய் கரூரில் உயிரிழந்தோரின் உறவினர்களை வரவழைத்து ஆறுதல் கூறியது வரவேற்கத்தக்கது. விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றி கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
ஆர்.பி.உதயக்குமாரால்தான் அதிமுக இந்த நிலைமைக்கு சென்றுள்ளது. அதனால் அவரது கருத்துக்கு நான் பதிலளிப்பதில்லை. யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக அமைவது என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. தமிழக மக்களின் நலனை எண்ணியே கூட்டணி அமைப்போம். இந்த தேர்தலுக்குள் பல புயல், சூறாவளி வீசக் கூடும். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்.
அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்குவதற்கு அக்கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர்தான் காரணம். தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் மூலமாக அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் விதிமுறையை கொண்டு வந்தார். தற்போது அந்த விதிமுறையை மாற்றிவிட்டனர். மீண்டும் அந்த விதிமுறையை நிலைநாட்டவே நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் சரியாகத்தான் நடக்கும்” என்று ஓபிஎஸ் கூறினார்.