வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) முடங்கும் சூழல் ஏற்படும். நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை என்று வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில், இதை நம்பியுள்ள 4.2 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த அபாயத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளாத அமெரிக்க அரசு, இப்படியொரு நிலை உருவானால் அதற்கு அமெரிக்க எதிர்க்கட்சிதான் காரணம் என்ற வகையில் ஜனநாயகக் கட்சி மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஜனநாயகக் கட்சியினர் அந்நியர்களுக்கு ஆதாயமாக இருக்கும் ஹெல்த் கேர் திட்டத்துக்காக அமெரிக்கர்களுக்கு பயனாக இருக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஆபத்தில் கிடத்தியுள்ளனர். வெட்கக்கேடு.” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும்.
இந்நிலையில், அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இந்த முடக்கத்துக்குப் பின்னணியில் அஃபர்டபிள் கேர் (அல்லது) ஒபாமா கேர் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தது இந்த ஷட்டவுனின் தாக்கங்கள் தற்போது உள்நாட்டில் தீவிரமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டத்தால் என்ன பலன்? – அமெரிக்காவின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்த ஃபுட் ஸ்டாம்ப்ஸ் மூலம் ஒரு தனிநபராக இருந்தால் 190 டாலர், ஒரு குடும்பம் என்றால் 356 டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்களை இலவசமாக வாங்க இயலும. இதில் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள், ரொட்டி ரகங்கள் உடன் இன்னும் சில உணவுப் பொருட்கள் அடங்கும். ஆனால், இந்த அட்டையை வைத்து உணவு அல்லாத மதுபானம் போன்றவற்றை வாங்க இயலாது,
அமெரிக்க ஷட்டவுனின் போது புள்ளிவிவரத் துறையும் முடங்கிவிடும் என்பதால், தற்போது அமெரிக்க நிதி தொடர்பான துல்லிய விவரங்கள் ஏதுமில்லை. இருப்பினும் அங்கே சமூகவலைதளங்களில் பரவலாக நவம்பர் 1-ல் இருந்து ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டம் செயலிழக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது அங்கு குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டது. கூடவே தேங்க்ஸ் கிவிங், கிறிஸ்துமஸ் என்ற பண்டிகைகளும் வரிசையாக வரும். இந்தச் சூழலில் ஃபுட் ஸ்டாம்ப்ஸ் நின்றுபோனால் என்னவாகும் என்ற பதற்றமும் பரவத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண் துறை அமைச்சகம் மாகாண SNAP திட்ட இயக்குநர்களுக்கு, இம்மாத இறுதியுடன் திட்டத்துக்கான நிதி தீர்ந்துவிடும் என்று கடிதமும் எழுதியுள்ளது.

என்ன செய்யலாம் ட்ரம்ப்? – அரசு முடங்கியுள்ள சூழலில் அவசரம், அவசியம் கருதி ட்ரம்ப் இப்போதைக்கு ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டத்தின் அவசர நிதியை விடுவிக்கலாம். ஆனால் அது முழு மாதத்தில் 3-ல் 2 பங்கு நாட்களுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கலாம். இல்லாவிட்டால் வேளாண் துறையின் நிதியை விடுவிக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர், திட்டத்தை முழுமையாக நிறுத்தாமல், அவ்வப்போது நிதி ஆதாரத்தைப் பொறுத்து நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ட்ரம்ப் அரசு மகளிர், பச்சிளங் குழந்தைகள், சிறுபிள்ளைகளுக்கான திட்டத்தைத் (Women, Infants and Children programme- WIC) தொடர்ந்து செயல்படுத்த நிதியை தயார் நிலையில் வைத்திப்பதாக அரசு நிர்வாகம் கூறுகின்றது. ஆனால், இல்லினாய், நியூயார்க், வடக்கு கரோலினா, டெக்சாஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முக்கிய அதிகாரிகள் ஷட்டவுன் நீடித்தால் ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டப் பயனாளர்களுக்கு நவம்பர் 1-ல் இருந்து பெரிதாக உதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

கலிஃபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் கூறுகையில், “அரசு நிதியிலிருந்து 80 மில்லியன் டாலர் விடுவித்து உணவு வங்கிகள் செயல்பாட்டை உறுதி செய்யப்போகிறேன்.” என்று கூறியுள்ளார். விஸ்கான்ஸின் ஆளுநர் கூறுகையில், “காலியான கப்போர்டுகளும், காலி வயிறுகளும் வாஷிங்டன் பிழையின் விளைவு.” என்றார்.
ட்ரம்ப் அரசு முடக்கத்தால் ஏற்கெனவே மாகாணங்களின் உணவு வங்கிகளுக்கு அளிக்கப்படும் டெலிவரிகளில் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் செல்வது தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தச் சூழலில் ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும் – எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து முடக்கம் முடவுக்கு வந்தால் மட்டும் எல்லாம் சுமுகமாகும்.