சென்னை: தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயஉதவிக் குழு மகளிரின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் உள்ள 388 வட்டாரங்கள், 12,525 ஊராட்சிகளில் உள்ள 3.31 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழு பிரதிநிதிகளுக்கும், 16,562 பள்ளிகள், 1,602 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மனநலம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்குஎதிரான விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதில் மனநலம் மற்றும் மனநோய், மனநல கோளாறுகள், தற்கொலை தடுப்பு, கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள், சமூக மனநலம், மனநலம் தொடர்பான சட்டம் மற்றும் திட்டங்கள், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றி விளக்கம் அளிக்கப்படும். மேலும், வளரிளம் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் முதியோருக்கான மனநல இடையீடுகள் குறித்தும் பயிற்சியில் விளக்கமளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.