சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருப்பதால், அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, கட்சியின் சார்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக சார்பில் பூத் (பாகம்) அமைப்பதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, அப்பணி நிறைவடைந்த காரணத்தால், கடந்த 11-ம் தேதி விடுவிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், மீண்டும் வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை கண்காணித்து, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து முழுமையாக செய்து முடித்து, அதன் விவரங்களை கட்சி தலைமைக்கு தெரிவிகக் வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக வரவேற்பு: முன்னதாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில், “2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரியானதாக இல்லை. 2023-ல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்த தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பேர் மற்றும் இறந்தவர்கள் 8 ஆயிரம் பேர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
2024 மக்களவை தேர்தலின்போது, சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவர்கள் உள்ளிட்ட 44 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.