மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று மாலையில் மதுரை வருகை தந்தார். அதனையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 6.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ் ஆகியோர் துணை குடியரசுத் தலைவரை வரவேற்றனர். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அ்ம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, முக்குறுணி விநாயகர், எல்லாம் வல்ல சித்தர் சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

பின்னர் இரவு 7.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசல் வழியாக வெளியே வந்தார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார். இதற்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த போது சி.பி.ராதாகிருஷ்ணன் மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளியறை பூஜையின் போது தரிசனம் செய்தார். தற்போது துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல்துறை ஆணையாளர் ஜெ.லோகநாதன் ஆகியோர் வரவேற்றனர்.