நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கு: வனத்துறை, கோயில் நிர்வாகம் பதிலளிக்க  உத்தரவு

சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், கோயிலுக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து 5 வயது குட்டி யானையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை விதிக்கக் கோரி, ‘பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ ( People For Cattle in India ) என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், உத்தராகண்ட் வனத்துறை சரணாலயத்தில் பராமரிக்கப்படும் குட்டி யானையை, தாயிடம் இருந்தும், கூட்டத்தில் இருந்தும் பிரித்துக் கொண்டு வரப்பட உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் தான் காந்திமதி யானை உடல்நலக் குறைவால் மரணமடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் யானை தாக்கி பாகன் இறந்த சம்பவம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடந்த சம்பவங்கள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யானைகள் வைத்துக் கொள்ள தனிநபர்களுக்கும், கோயில்களுக்கும் உரிமம் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோயிலுக்கு ரோபோ யானை வழங்கத் தயாராக இருப்பதால், உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.