விருதுநகர்: வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.
விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று ஆய்வு மேற்காண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு 1961-ல் தொடங்கப்பட்டது. சுமார் 5.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 21,254 மெட்ரிக் டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இங்கு ரேசன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் அரசி சேமித்து வைக்கப்படுகிறது. 2022-க்கு பிறகு முழு கொள்ளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு பணி கிடைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்கள். இதற்காக அரசு அதிகாரிகள் தீர்வு காண்பார்கள்.
தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களிலிருந்து வரும் அரிசி மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் தூத்துக்குடியிலிருந்து இந்திய உணவுக் கழக அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்கின்றனர். நெல் கொள்முதலை வேகமாக நடத்தி வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல் கொள்முதல் தொடர்பாக அரசு கவனத்தோடு செயல்படும்.
கரூர் அசம்பாவிதத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நாங்கள் நேரடியாக சென்று ஆறுதல் கூறினோம். விஜய் பாதிக்கப்பட்டோரை அழைத்து ஆறுதல் கூறுகிறார். ஒவ்வொருவரின் அணுகுமுறையும் மாறுபடும். வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் செய்வது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் உறுதிப் படிவம் வழங்க வேண்டும். ஆனால், விவசாயக் காலத்தில் இந்த அவசர நடவடிக்கை தேவைதானா. படிவம் கொடுக்கவில்லை எனில் அவர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்த நடைமுறையால் சுமார் 30, 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏழை, எளியோர், அன்றாட கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போன்றோர் ஆதரிப்பது வருத்தமாக உள்ளது. இது உண்மையில் தேவையில்லாத ஒன்று. அமித்ஷாவின் அதிகாரித்தால் இது அமல்படுத்தப்படுகிறது. அக்.6 முதல் டிச.6-ம் தேதிக்குள் படிவம் வழங்கவில்லை எனில் அவர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்.
தமிழகத்தில் அமித்ஷாவின் சதி தோற்கடிக்கப்படும். பிஹாரில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலிலிருந்து தமிழகத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கப்போவதில்லை.” என்றார்.