பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பீகாரை மையமிட்டு வலம் வருகின்றனர்.
பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் பிரசாரத்தில், “பீகார் மக்களின் உழைப்பால்தான் துபாயில் வானுயர கட்டடங்கள் எழுந்தது.
ஆனால், இந்த மண்ணின் மக்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு இல்லை. அதனால்தான் பல மாநிலங்களுக்கு பீகார் மக்கள் வேலை தேடிச் செல்கிறார்கள்” என்றார்.

இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடியின் பிரசார உரையில், “பீகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்கும்.
பீகார் மக்களை பஞ்சாபிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கூறினார்.
இதேபோல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, திமுக ஆளும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் பீகார் தொழிலாளர்கள் அவமதிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் உரை சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டப் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலுக்கு என் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எல்லோரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அவர் பீகாரி, கோ மூத்திரம் குடிப்பவர், வட இந்தியன், வடக்கன் என மக்களைப் பிரித்து நாட்டில் பிரிவினையை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது திமுக.
மற்ற சமயத்தவர்களின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லி, இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இந்துக்களையும் பிரித்து பார்ப்பது ஸ்டாலின்.
பிரதமர் மோடி நேற்று பீகார் பிரசாரத்தில், பீகார் மக்களை கீழ்த்தரமாக, பாகுபாட்டுடன் பேசுவது திமுக என்றுதானே சொன்னார். தமிழர் என்று சொல்லவில்லை.
ஆனால், திமுக-வில் இருக்கும் பாதி பேர் தமிழர்களே அல்ல. வேண்டுமானால் கணக்கெடுத்துப் பாருங்கள். சட்டமன்ற உறுப்பினர்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் பச்சைத் தமிழர் எத்தனைப் பேர் எனக் கணக்கெடுத்துப்பாருங்கள்.

ஆனால், பா.ஜ.க அப்படி வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது. திமுக மீது வைக்கப்படும் விமர்சனம் திமுக மீதுதானே தவிர தமிழர்கள் மீது அல்ல.
தமிழர்கள் பீகாரிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதை வேற்றுமைபடுத்துவது திமுக.
நம் தமிழர்கள் பீகாரில், டெல்லியில், மும்பையில் வேலை செய்கிறார்கள். பிரதமர் தமிழர்கள் குறித்து தவறாகப் பேசவே இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
