ஒரு தனியார் தொலைக்காட்சியில், நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தொகுத்து வழங்கும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த நடிகரைப் பார்வையாளராக வந்த எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடுகிறார்.
தொடர்ந்து, மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் அழகர், அடுத்த ஐந்து நாள்களில் ஐந்து பேரைக் கொல்லப்போவதாகவும் அறிவிக்கிறார். அது நேரலை நிகழ்ச்சி என்பதால் மொத்த தமிழ்நாடும் பற்றி எரிகிறது.

இதை விசாரிக்க காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பி (விஷ்ணு விஷால்) களமிறங்குகிறார். அழகர் யார், அவர் சொன்னபடி கொலைகள் நடந்தனவா, அறிவுடை நம்பி தலைமையிலான காவல்துறை அவற்றைத் தடுத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் பிரவீன்.கே-வின் ‘ஆரியன்’ திரைப்படம்.
துடிப்பும், மிடுக்கும் மிக்க இளம் காவல்துறை அதிகாரி எனும் உடையில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷ்ணு விஷால். ஸ்டைலிஷ் ஆக்ஷனில் க்ளாப்ஸ் வாங்கும் விஷ்ணு, எமோஷன் மீட்டரில் பாதி கிணற்றையே தாண்டுகிறார்.
இரண்டாம் கதாநாயகனாக (?) மர்மத்தைக் கூட்டிக் கவனிக்க வைக்கும் செல்வராகவன், தேவையான பயத்தைக் கூட்டத் தவறுகிறார். கதையின் போக்கிலேயே வந்து, தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

கதாநாயகனின் காதலோடு போராடும் மனைவியாக மானசா சௌந்திரி, காவல்துறை உயர் அதிகாரியாக அவிநாஷ்.ஒய், காவலாளியாக ஸ்டில்ஸ் பாண்டியன் போன்றோர் வந்து போகிறார்கள்.
திகட்டாத ஒளியமைப்பால் மர்மத்தையும், பதற்றத்தையும் கடைசி வரை இழுத்துப் பிடிக்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன். முக்கியமாக, இறுதிக்காட்சிக்கு முந்தைய இரவு நேரச் சண்டைக் காட்சியைச் சண்டைப் பயிற்சியாளர்கள் ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு கூட்டணியோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
முன்னுக்குப் பின்னாக விரியும் முதற்பாதி விசாரணைக் காட்சிகளை, விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.
ஜிப்ரானின் இசையில், ‘அழகியலே’ பாடல் இதம். பரபரப்பு குறையும் தருணங்களைச் சிறகடித்துப் பரபரக்க வைத்திருக்கிறது அவரின் பின்னணி இசை. ஆனாலும் க்ரைம் படங்களுக்குத் தேவையான தனித்துவமான இசை இல்லாதது ஏமாற்றமே!
நிகழ்ச்சி அரங்கம், செல்வராகவனின் வீடு போன்றவற்றில் எஸ். ஜெயசந்திரனின் தயாரிப்பு வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.
நேரலை நிகழ்ச்சி, செல்வராகவனின் அறிமுகம், துப்பாக்கிச் சூடு எனத் தொடக்கத்திலேயே த்ரில்லர் திரி பற்றுகிறது. விஷ்ணு விஷாலின் வருகைக்குப் பிறகு, பரபரவென விரியும் தொடக்கக் கட்ட விசாரணைகளோடு, செல்வராகவனின் திட்டங்களும் களமிறங்க, பிரவீன் கே – மனு ஆனந்த் கூட்டணியின் எழுத்தில் விறுவிறுப்போடு சுவாரஸ்யமும் கூடுகிறது.

அதேநேரம், போலீஸ் – குற்றவாளிக்கு இடையிலான டாம் அண்டு ஜெர்ரி விளையாட்டில், போலீஸின் விசாரணை மேம்போக்காகவும், குற்றவாளியின் விளையாட்டு நியாயமான காட்சிகளோடு இல்லாமலும் இருப்பதால், பரபரப்பு மங்கத்தொடங்குகிறது.
ஐந்து நபர்கள் யார், யார், அவர்களின் பின்னணி போன்ற கேள்விகளை விளக்கும் காட்சிகள் தேவையான நிதானமில்லாமல் ஓடுவதால், எமோஷனலாக அக்கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியாமல் போகிறது.
இரண்டாம் பாதியும் இதே மீட்டரில் விசாரணை, துரத்தல் என ஏற்ற இறக்கமின்றி ஓடுகிறது திரைக்கதை. காவல்துறையின் விசாரணை தோற்றுக்கொண்டே இருப்பதும், குற்றவாளி அதீத, நம்ப முடியாத சாகசங்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பதும் அலுப்பைத் தருகின்றன.
ஆங்காங்கே தலைகாட்டும் ட்விஸ்ட், திக் திக் காட்சிகள், இறுதிக்காட்சிக்கான எதிர்பார்ப்பு, எழுத்தாளரான செல்வராகவனின் எழுதப்படாத நாவல், அதைக் கதையோடு இணைத்த விதம் போன்ற சுவாரஸ்ய சாவடிகள் மட்டும் அலுப்பைப் போக்க உதவியிருக்கின்றன.

இறுதிக்காட்சியில் விளக்கப்படும் குற்றவாளியின் மறுபக்கமும், கொலைக்கான காரணங்களும் அவரின் வாக்குமூலமும் குபீர் ரகத்தில் இருப்பது மிகப்பெரிய மைனஸ்! பொதுமக்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு கொலையாளி பேசும் சமூக கருத்து, கொலைக்கான காரணத்தை நியாயப்படுத்தும் ‘தத்துவார்த்த உரையாடல்கள்’ போன்றவை லாஜிக் இல்லாமல் சிரிப்பையே வரவழைக்கின்றன.
மையச்சரடை (கொலைக்கான காரணம்) சரியாகப் பிடிக்காமல் போனது, தெளிவாகப் போடப்பட்ட முடிச்சுகளை அதே தெளிவோடு அவிழ்க்காமல் போனது போன்ற காரணத்தினால் இந்த ‘ஆரியன்’ ஏமாற்றமே தருகிறான்.
