கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’.
மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்தார்.

அப்போது, `எத்தனைப் படங்கள் நடித்தாலும் 96 மாதிரியானப் படம் அடுத்து அமையவில்லையே?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கௌரி கிஷன், “96 ஒரு CULT படம். எனக்கு தெரிந்தவரை அது timeless படமாகதான் இருக்கும். அன்பே சிவம் மாதிரி ரொமான்டிக் ஜானர்ல 96 கிளாசிக் படம்.
அந்தப் படத்தில் நடித்ததின் அன்பும், ஆதரவும்தான் இப்போதுவரை எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
அதே நேரம் ஒரு நடிகையாக பல கதைகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு நல்ல நடிகையாக வெற்றிபெற வேண்டும். அதற்காகதான் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
அதர்ஸ் படத்தில் கூட டாக்டராக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதற்காக மெனக்கெட்டிருக்கிறேன். 96 மாதிரியான இன்னொரு படத்தில் நடிக்க காத்திருக்கிறேன்.
என்றாலும் ஆசை படலாம் அதற்காக பேராசைப் படக்கூடாது. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அந்த வெற்றியை தக்கவைக்க முயற்சிக்கிறேன்.

இந்தப் படத்தில் இவர் புதுமுக நடிகர் என்கிறீர்கள். நான் இப்போதுவரை புதுமுக நடிகையாகதான் உணர்கிறேன். நான் இந்த துறைக்கு வந்தபோது, சில நடிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுதான் என்னால் சிலப் படங்களில் நடிக்க முடிந்தது.
அதுபோலதான் புதிதாக இந்த துறைக்கு வருபவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இதற்கு முன்னர் நான் நடித்த படங்களெல்லாம் புது தயாரிப்பாளர்கள்தான். நான் புதியவர்களை நம்புகிறேன்.” என்றார்.
