சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் தியாகராஜன், தேவா ஆகியோர் கடந்த 2-ம் தேதி அதிகாலை கண்ணன் ரவுண்டானாவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மஞ்சள் நிற கார் வேகமாக வந்தது. அந்த காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லை. உடனடியாக போலீஸார், காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். காரை ஓட்டி வந்தவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பாலசுப்பிரமணியன் (39), அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. காரில் இருந்த பெண்ணின் பெயர் ரம்யா (22) ( மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்று தெரிந்தது.

இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில் வெள்ளை நிறமுள்ள போதைப்பொருள் இருந்தது. மேலும் கண்ணாடிக் குப்பிகள், எடைபோடும் மெஷின், போதைப்பொருளை உறிஞ்சும் பேனா மூடி வடிவிலான பிளாஸ்டிக் பொருள்கள், பாஸ்போர்ட், நான்கு செல்போன்கள் ஆகியவை இருந்தன. பாலசுப்பிரமணியத்தின் பர்சில் சிறிய ஸ்டாம்ப் வடிவிலான போதைப்பொருள் இருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பாலசுப்பிரமணியன், ரம்யா ஆகியோரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஃபிரான்வின் டேனி விசாரணை நடத்தினார். பின்னர் பாலசுப்பிரமணியத்தை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட பாலசுப்பிரமணியன், ரம்யாவை போதைப்பொருளுக்கு அடிமையாக்கியது தெரியவந்தது. அது தொடர்பாக ரம்யாவிடம் விசாரித்தபோது அவரின் தோழி ஒருவர் மூலம் பாலசுப்பிரமணியன், ரம்யாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் நேரில் சந்தித்தபோது ரம்யாவை பாலசுப்பிரமணியன் மூளைச்சலவை செய்திருக்கிறார். இதையடுத்து ரம்யாவுக்கு போதைப்பொருளை பயன்படுத்தக் கற்றுக்கொடுத்த பாலசுப்பிரமணியன், அவர் போதையிலிருந்தபோது ஆபாசமாக வீடியோக்களை எடுத்திருக்கிறார். மேலும் ரம்யாவைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான ரம்யா, ஒரு கட்டத்தில் பாலசுப்பிரமணியன் சொல்வதை மட்டுமே கேட்டுள்ளார். சம்பவத்தன்றுகூட ரம்யா, இன்னும் சிலருடன் பாலசுப்பிரமணியனின் இன்பச் சுற்றுலாவுக்குச் சென்று போதை விருந்தில் கலந்துகொண்டு காரில் திரும்பி வந்துள்ளார். பாலசுப்பிரமணியனின் பிடியில் சில பெண்கள் சிக்கியுள்ளனர். அவர்களைப் பாலியல் தொழிலும் அவர் ஈடுபடுத்தியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக ரம்யா, பாதிக்கப்பட்ட சிலரிடம் தொடர்ந்து விசாரித்துவருகிறோம். பாலசுப்பிரமணியத்தின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் 8-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவர்களின் விவரங்களைச் சேகரித்துவருகிறோம். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கணவரைப் பிரிந்து வாழும் இளம்பெண்களை டார்கெட் செய்யும் பாலசுப்பிரமணியன், முதலில் அவர்களை வசதியாக வாழவைப்பதாகக் கூறி மூளைச் சலவை செய்வார். பிறகு போதைக்கு அடிமையாக்குவார். போதை மயக்கத்தில் பாலசுப்பிரமணியன் சொல்வதை அந்தப் பெண்களும் செய்துவந்திருக்கின்றனர்.
பாலசுப்பிரமணியன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய், கனிகளை மொத்தமாக விற்கும் பிசினஸை முதலில் செய்து வந்திருக்கிறார். ஐடிஜ படித்த அவர், ஈவென்ட்களை நடத்தியிருக்கிறார். அதற்காக வெளிநாடுகளுக்கு பாலசுப்பிரமணியன் சென்று வந்துள்ளார். அப்போது அவரின் மனைவியையும் பாலசுப்பிரமணியன்அழைத்துச் சென்றுள்ளார். வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வரும்போது உள்ளாடையில் தங்கக்கட்டிகளைக் கடத்தியும் வந்திருக்கிறார். ஒரே ஒரு தடவை மட்டும் பாலசுப்பிரமணியன் சுங்கத்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

தங்கக் கடத்தலையடுத்து வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள்களையும் பாலசுப்பிரமணியன் கடத்தியுள்ளார். அந்த போதைப்பொருள்களை இளம்பெண்கள் மூலம் விற்பனையும் செய்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிறு கும்பலுக்கு தலைவனாகவும் செயல்பட்டுவந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் பெண்களுடன் பாலசுப்பிரமணியத்துக்கு அறிமுகம் கிடைத்தால் அவர்களில் சிலரைப் பாலியல் தொழிலும் ஈடுபடுத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் கஞ்சா 2.0 என்ற ஆபரேஷனையொட்டி வண்ணாரப்பேட்டை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோதுதான் இளம்பெண் ஒருவருடன் வந்த போதைப்பொருள் கடத்தலின் தலைவன் பாலசுப்பிரமணியன் சிக்கிக்கொண்டார். போதைப்பொருள் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தைக் கைதுசெய்துள்ளனர். ரம்யா அளித்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் பாலசுப்பிரமணியத்தைக் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது’’ என்றனர்.