திமுக அரசின் மெத்தனம்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.!!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், ஆளும் அரசு அரசிற்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், உள் நோயாளிகளாக ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சைக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லாததால் ஏழை நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையை நாடாமல்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 

இங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சென்னையில் மிக முக்கிய மருத்துவமனையாக திகழ்கிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையிலிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் நோயாளிகள் அச்சம் அடைந்தனர். இந்த தீ விபத்தில் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது சற்று நிம்மதி அளித்தாலும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், ஆளும் அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, பிரசவத்திற்கு பணம் கேட்கும் பழக்கம் என பல்வேறு அவலங்கள் நடந்து வருகிறது. அண்மையில் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் நிர்வாகத்திற்கு தெரியாமல் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளின் லட்சணம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.