தமிழகத்தில் அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டுமானால் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுமக்குழு கூட்டத்தில் பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,
“ஆளுநரும், தமிழக அரசும் ரெயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும். யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கக் கூடாது.
பொதுமக்களையும், தேர்வு எழுதும் மாணவர்களையும் மின்வெட்டு பெரிதும் பாதித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும், முன் எச்சரிக்கையாக கணித்து செயல்பட தமிழக அரசு தவறி விட்டது.
தமிழகத்தில் 70 சதவீதம் பிரச்சினைகளுக்கு மதுக்கடையே காரணமாகின்றன. தற்போது பள்ளி மாணவர்கள் கூட மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுவிலக்கை முழுமையாக செயல்படுத்த செயல் திட்டம் கொண்டு வர வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாநில அரசை மத்திய அரசு சொல்வது ஏற்புடையது அல்ல” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.