மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காளி தரிசனத்துக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கினார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கோயில் தரிசனத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பதி விட்டுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட விபத்துக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். ‘மகா காளி தரிசனத்துக்காக வந்தேன். கோயிலுக்கு செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது. எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனே மருத்துவமனைக்கு சென்று சில தையல்கள் போட்டுக்கொண்டேன். ஜெய்ஸ்ரீ மகா காளி’ என்று தெரிவித்துள்ள தனுஸ்ரீ தத்தா, தனக்கு காயம் ஏற்பட்ட காலின் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது முழங்காலில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இதனால், தனுஸ்ரீ தத்தாவின் ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, திடீரென்று சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பிறகு மீடூ புகார் மூலம் அவர் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
