சென்னை: மனிதனை மனிதன் தூக்கி சுமக்க சொல்வது மாண்பாக இருக்காது, அது மதிப்பிற்குரியவர்கள் செய்கின்ற செயலாக இருக்காது என்று நினைக்கிறேன், என்னைப் பொருத்தவரை பட்டினப்பிரவேசம் என்பதே தவறு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” மனிதனை மனிதன் சுமப்பது இழிவு என்றுதான் பல நாட்களாக நாம் பேசி வருகிறோம். அது மானுட விசயத்தில் ஒவ்வாது. அன்றைய காலத்தில் வாகனங்கள் இல்லை. தூக்கி சென்றோம் எனவே அன்றைய காலகட்டத்தில் சரி. ஆனால் இன்றைக்கு நவீன வாகனங்கள் வந்துவிட்டன. என்னைப் பொருத்தவரை பட்டினப்பிரவேசம் என்பதே தவறு. மறுபடி மறுபடியும் ஏன் நாம் அந்த சமஸ்கிருதத்தைப் பிடித்து தொங்க வேண்டும் என்று தெரியவில்லை.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க சொல்கின்றனர், சமஸ்கிருதத்தை படிக்க சொல்கின்றனர். ஆனால், எந்த கோயிலில் மணியடிக்க விடுவார்கள் என்றுதான் தெரியவில்லை. அதுதனி, மனிதனை மனிதன் தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல. மற்றபடி அவர்களது பிற நிகழ்ச்சிகளான பவனி செல்வது, மக்களைச் சந்திப்பது உள்ளிட்ட மற்ற நிகழ்வுகளையெல்லாம் நாம் ஏற்கிறோம், அதனை எதிர்க்கவில்லை. இந்த காலத்திலும் மனிதனை தூக்கி சுமக்க சொல்வது மாண்பாக இருக்காது என்று நினைக்கிறேன். மதிப்பிற்குரியவர்கள் செய்கின்ற செயலாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
மதுரை ஆதீனமோ, குன்றக்குடி ஆதீனமோ பல்லக்கில் செல்கின்றனரா?, மதுரை ஆதீனம் பிரதமரை சந்திப்பேன் என்று கூறுகிறார். ஆனால் அவர் பல்லக்கில் செல்கிறாரா?, அவர் செல்லமாட்டார். குன்றக்குடி அடிகளாரோ, இன்றைக்கு இருக்கின்ற பொன்னம்பல அடிகளாரோ செல்வார்களா?, திருவாடுதுறை ஆதீனம் மட்டும் அப்படி செல்ல வேண்டும் என நினைப்பது, அவரே சென்றிருக்கலாம், பல்லக்கின் முன் மோட்டாரைப் பொருத்தி, மக்களை சந்தித்திருக்கலாம் என்று அவர் கூறினார். அப்போது இந்த பிரச்சினையில் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் சிலர் கோரிக்கை வைக்கின்றனரே என்ற கேள்விக்கு, திராவிடர் கழகத்தை தொடக்கத்திலேயே தடை செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.