உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இதை அடுத்து, தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் புதிய அரசும் அமைந்துள்ளது. மேலும், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர்.
எனினும்,
ஆப்கானிஸ்தான்
நாட்டில் தாலிபான்களின் புதிய அரசை உலக நாடுகள் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டு உள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்தது.
பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: தலிபான்கள் அடுத்த அதிரடி!
இந்நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோதுமை ஏற்றுமதியை நிறுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களுக்கும் நிதி அமைச்சர் முல்லா ஹிதாயத்துல்லா பத்ரி உத்தரவிட்டு உள்ளதாகவும், நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.