நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உதகை நகரின் 200-வது ஆண்டு விழா இன்று (மே 21) உதகையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.118.79 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.34.30 கோடி மதிப்பில் 20 புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 9,500 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பழங்குடியின மக்களின் வரவேற்பு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. மக்களின் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஆ.ராசா குரல் கொடுக்கிறார். நீலகிரி மாவட்டத்திற்கே ராஜாவாக மக்களின் தேவைகளை அறிந்து ஆ.ராசா செயல்படுகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது.
வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும். சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கப்படும்” என்றார்.