கர்நாடகத்தில் மேலும் 4 லூலூ வணிகவளாகங்கள்

பெங்களூரு

10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 லூலூ வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாக தாவோஸ் மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாநாட்டில் ஒப்பந்தம்

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு நேற்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கர்நாடக தொழில்துறை மற்றும் லூலூ மால் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

10 ஆயிரம் பேருக்கு வேலை

அதன்படி ரூ.2 ஆயிரம் கோடியில் அந்த நிறுவனம் கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பெருநகரங்களில் மேலும் 4 லூலூ வணிக வளாகங்கள், ஏற்றுமதி தொடர்பான உணவு உற்பத்தி நிறுவனங்களை அமைக்கிறது.

இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தில் லூலூ நிறுவனத்தின் சர்வதேச இயக்குனர் அனந்தராமன் கையெழுத்து இட்டார்.

முதலீடு செய்ய அழைப்பு

மேலும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கர்நாடகத்தில் தொழில் முதலீட்டுகளை தொடங்க வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜூபிலியண்ட் குழும தலைவர், இடாச்சி, சீமெண்ஸ் நிறுவனங்களின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கர்நாடகத்தில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பு விடுத்தார். கர்நாடகத்தில் தொழில் தொடங்கினால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஜூபிலியண்ட் நிறுவனம் தேவனஹள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 9 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். சீமெண்ஸ் நிறுவனம் பெங்களூரு பொம்மசந்திரா பகுதியில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தை அமைக்கின்றன. இந்த நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் நடக்கிறது.

தொழில்துறை மந்திரி

‘பெங்களூருவை தாண்டி’ திட்டத்தின் கீழ் உப்பள்ளி-தார்வார் நகரில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், தொழில்துறை கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.