ராஜஸ்தானில் தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அரசு பள்ளி தலைமையாசியர் அளித்த புகாரின்பேரில் அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்திலுள்ள கார்கரா அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார் அஜித் யாதவ். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுமன் யாதவ் என்ற ஹரியானாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அவருடைய காதல் மனைவி தினமும் அவரை அடித்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் புகார் ஒன்றை முன்வைத்திருக்கிறார். மேலும் தனது தரப்பை நிரூபிக்க அவர் தனது மனைவிக்கு தெரியாமலேயே வீட்டில் சிசிடிவி கேமிராக்களை வைத்து தான் தினமும் அடிவாங்குவதை பதிவுசெய்திருக்கிறார்.
அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதன்பேரில் சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்த போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். இந்த சிசிடிவி வீடியோக்களில் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அஜித் வீடு முழுவதும் ஓடஓட அவருடைய மனைவி கிரிக்கெட் பேட்டால் துரத்தி துரத்தி அடிக்கிறார், மேலும் கையில் கிடைக்கும் இரும்பு வாணலி போன்றவற்றையும் ஆயுதங்களாக்கி தாக்குகிறார். இதுபோன்ற வீடியோக்களை பார்த்தபிறகு, அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணமாகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் தான் தினமும் அடிவாங்குவதாகவும், ஆனால் ஒருமுறைகூட தனது மனைவியை கைநீட்டி அடித்ததில்லை எனவும் புலம்புகிறார் பள்ளி தலைமையாசிரியர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
