டெல்லி: டெல்லியில் தந்தையை அடித்த இளைஞரை 7 மாதங்களுக்கு பிறகு துப்பாக்கியால் சுட்டு சிறுவன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜஹாங்கிபூாில் உள்ள H4 பிளாக்கில் வசித்து வருபவர் ஜாவித். இவர் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவிற்கு அருகே அமர்ந்துக் கொண்டிருந்தாா். அப்போது, 4 சிறுவர்கள் அவருக்கு அருகில் வந்துள்ளனர். திடீரென ஒரு சிறுவன் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஜாவத் முகத்திற்கு நேராக குறிபார்த்து சுட்டார். மறுநொடியே 4 சிறுவர்களும் ஓட்டம் பிடிக்க ஜாவத் நிலைதடுமாறி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல் துறையினர் விரைந்து சென்று ஜாவத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜாவத்தின் கண்ணில் குண்டடிப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட சிறுவனின் தந்தையை ஏழு மாதங்களுக்கு முன்பு ஜாவத் தாக்கியுள்ளார். அதற்கு பழி வாங்க நண்பர்களுடன் சென்று ஜாவத்தை சுட்டது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
