கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று அந்த தாய் குற்றம் சாட்டுகிறார். இதுவரை பள்ளி நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி பள்ளி வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பயங்கரமான கலவரம் வெடித்த நிலையில், ‘இந்த போராட்டத்தில் நாங்களோ எங்கள் உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை.’ என்று ஸ்ரீமதி தாய் மற்றும் வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த போராட்டத்தை செய்தது சமூக ஆர்வலர்கள் என்று ஒரு பக்கம் கூறினாலும், நெட்டிசன்கள் பலரும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கலவரம் என்று சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். இன்று தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், நேற்று நீட் தேர்வு பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நீட்தேர்வு தற்கொலைகளை திசை திருப்பவே இதுபோன்ற போராட்டம் மற்றும் கலவரத்தை யாரோ திட்டமிட்டு செய்வதாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று நடந்த போராட்டத்தில் நாங்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்று கூறியதும் சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.