சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் இல்லை; எனக்கு மனநிறைவு தந்தது இந்த 2 படங்கள்தான் -ரஜினிகாந்த்

பணம், புகழ், பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான் என்றும், வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் கிடையாது எனவும் சென்னையில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில், கிரியா யோகா மூலம் ‘இனிய வெற்றிகர வாழ்வு’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில், ஓம் குருவே சரணம் என்று பேச்சை தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், “என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். இது பாராட்டா, திட்டா என எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தவை ‘ராகவேந்திரா’ மற்றும் ‘பாபா’ ஆகிய இரு திரைப்படங்கள்தான்.

image

‘பாபா’ படத்திற்குப் பிறகு நிறைய பேர் இமயமலைக்கு சென்றதாகச் சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன். இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும். அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல், வைட்டமின்கள் கிடைக்கும்.

இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதைவிட நோயளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருப்பதினால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம், இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடி கொண்டிருக்கும்போது போய் சேர்ந்துவிட வேண்டும். (நான் கூட இரண்டு முறை மருத்துவமனை போய்ட்டு வந்தவன்).

பணம், புகழ், பெயர், பெரிய பெரிய அரசியல்வாதிகள் என எல்லாத்தையும் பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம், நிம்மதி, 10 சதவிகிதம் கூட இல்லை. ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் கிடையாது” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.