''ஒரு சோளக் கதிர் 15 ரூபாயா.. ரொம்ப காஸ்ட்லி'' – சாலையோர வியாபாரியிடம் மத்திய அமைச்சரின் பேரம்

போபால்: சாலையோர வியாபாரியிடம் மக்கா சோளம் வாங்குவதற்கு மத்திய இணையமைச்சர் பேரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய எஃகு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே. மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா தொகுதியில் இருந்து மக்களவை தேர்வான இவர், அம்மாநில பாஜகவின் மூத்த தலைவரும்கூட. இவர் நேற்றுமுன்தினம் தனது தொகுதிக்கு விசிட் அடித்திருந்தவர், ஒரு வீடியோ ஒன்றை வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார். அதில், சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றில் சோளம் வாங்கி சாப்பிடுகிறார் அமைச்சர் குலாஸ்தே. அந்தப் பதிவில், “இன்று உள்ளூர் வியாபாரி விற்ற சோளத்தை ருசித்தோம். நாம் அனைவரும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் கடைக்காரர்களிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். இது அவர்களுக்கு வேலை வாய்ப்பையும், கலப்படமற்ற பொருட்கள் விற்பனை தடையையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. வீடியோ தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவில்லை. மாறாக, வீடியோவில் அமைச்சரின் பேச்சுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் சாலையோரத்தில் சோளம் வாங்குவதற்காக அமைச்சர் இறங்குகிறார். மூன்று துண்டு சோளம் வாங்கவும் செய்கிறார்.

பின்னர், சோளம் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த விரிவான வழிமுறைகளை கேட்கும் அவர், அதை விற்கும் சிறுவனிடம் விலையை கேட்கிறார். அதற்கு சிறுவன் மூன்று துண்டு 45 ரூபாய் எனப் பதில் கூற, ”ஒரு துண்டு சோளம் 15 ரூபாயா.. விலை ரொம்ப அதிகம்” என அமைச்சர் வியப்புடன் பேசுகிறார். பதிலுக்கு அந்த சிறுவன் சிரித்த முகத்துடன், “இது நிலையான விலைதான் சார். நீங்கள் காரில் வந்திருப்பதால் நான் விலையை உயர்த்தி சொல்லவில்லை” எனச் சொல்ல, அமைச்சரோ, “இந்தப் பகுதியில் சோளங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. பிறகு எதற்கு விலை உயர்வு” என்ற ரீதியில் கேள்வி எழுப்பி, சிறுவன் கேட்ட பணத்தை கொடுக்கிறார்.

சாலையோரத்தில் சோளம் விற்று பிழைக்கும் சிறுவனிடம் மத்திய இணையமைச்சர் பேரம் பேசிய இந்த நிகழ்வை தான் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மத்தியப் பிரதேச காங்கிரஸ் கடுமையாக மத்திய அமைச்சரை விமர்சித்துவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.