புதுச்சேரி: கிரண்பேடி தடையாக இருந்து வெள்ளத்தடுப்பு சுவர் கட்டாததுதான் ஏனாமில் பாதிப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து திமுக புதுச்சேரி அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏனாம் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.
மேலும் அங்கு மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.
பின்னர் ஏனாம் மண்டல நிர்வாகி அமன் ஷர்மாவுடன் வெள்ளப் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே புதுச்சேரி அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரணம் உடன் தரவேண்டும். இந்நிவாரணம் போதாது, ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வெள்ளப் பெருக்கிற்கு கோதாவரி ஆற்றின் கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டாததுதான் காரணம். இதற்கு கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்ததால் செய்ய முடியவில்லை.
தற்போது வெள்ள தடுப்பு சுவர் கட்டாததுதான், வெள்ளப்பாதிப்புக்கு காரணம் என்பது உணரப்பட்டுள்ளது. எனவே அரசு வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். அரசுத்துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வெள்ளத்தால் சேதமான ஏனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும்.
முறையாக களப்பணி ஆற்ற வேண்டும். முதல்வர் ரங்கசாமிக்கு ஏனாம் பிராந்தியத்தின் மீது என்ன மனக்கசப்பு இருந்தாலும் அதனை மறந்து உடனடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏனாம் பிராந்தியத்தை வந்து பார்வையிட வேண்டும். மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணமும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.