சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்குச் சென்றார். அவர் சிறையில் இருந்த போது கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனின் பதவி செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தையும், கூட்டத்தில் இயற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை மாவட்ட நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியதால், டி.டி.வி தினகரன் இந்த வழக்கில் இருந்து பின்னர் விலகினார். இந்நிலையில், சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எப்பாடி பழனிச்சாமி, செம்மலை ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், சசிகலா மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “முழுமையாக விசாரணை நடத்தாமல், உரிமையியல் நீதிமன்றம் எனது மனுவை நிராகரித்துள்ளது. எனது தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப நிலையிலேயே உரிமையியல் நீதிமன்றம் எனது மனுவை நிராகரித்துவிட்டதால், இந்த வழக்கு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும். உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.