கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோவை மாநகரப் பகுதிகளின் குளங்கள், மாதிரிச்சாலைகளில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சிக் குளம், முத்தண்ணன் குளம், செல்வ சிந்தாமணி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்தக் குளங்களின் கரைகளை பலப்படுத்தி, புனரமைத்து, பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பெரும்பாலான குளங்களில் புனரமைக்கும் திட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
அதேபோல், ரேஸ்கோர்ஸ் நடைபாதை, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலை ஆகிய இடங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், மாதிரி சாலையாக ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், டி.பி. சாலையில் மாதிரி சாலை திட்டப்பணி முடிவடைந்து விட்டது. ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் மாதிரி சாலை திட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டி.பி.சாலையில் பல்லடுக்கு வாகன நிறுத்தகமும் மாநகராட்சியின் சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாயை பெருக்கும் வகையில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட குளங்கள், மாதிரிச் சாலைகள், பல்லடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கட்டணம் நிர்ணயம்:
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “தமிழக அரசின் சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் வருவாயை பெருக்க, சில இடங்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5.30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பெரியகுளத்தில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு (24 மணி நேரம்) கட்டணமாக ரூ.75 ஆயிரமும், வைப்புத் தொகையாக ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 2.75 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 6.50 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வாலாங்குளம், 1.50 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செல்வசிந்தாமணி குளம், 5.03 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குறிச்சி குளம், 2.25 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குமாரசாமி குளம், 2.35 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செல்வாம்பதி குளம், 2.65 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிருஷ்ணாம்பதி குளம், ரேஸ்கோர்ஸ் மாதிரி, டி.பி.சாலை மாதிரிசாலை, டி.பி.சாலை பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தகம் ஆகிய இடங்களுக்கும் நாளை ஒன்றுக்கு (24 மணி நேரம்) திரைப்பட படப்பிடிப்பு நடத்த வாடகைத் தொகையாக தலா ரூ.75 ஆயிரம், வைப்புத் தொகையாக தலா ரூ.2 லட்சம் என மொத்தம் தலா ரூ.2.75 லட்சம் கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டணம் மற்றும் வைப்புத் தொகையில் தலா 50 சதவீதம் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் ஒப்புதல் பெற்று இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.