ஸ்ரீமதி கேஸ் மாதிரி ஏதாவது பண்ணலாமுன்னு ஐடியாவா ? அடங்காத வாத்தி..! மாணவியை மிரட்டிய கொடூரம்..!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதி மாதிரி ஏதாவது பண்ணலாமுன்னு ஐடியா வச்சிருக்கியா ? என்று கேட்டு, ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை மிரட்டிய புதுச்சேரி தனியார் பள்ளி ஆசிரியரின் ஆபாச வாட்ஸ் ஆப் சாட்டிங் வெளியான நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி 100 அடி சாலையில் மரபாலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்துவரும் மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் சகாய தோனி வளவன் என்கிற டேனியல் என்பவர் பல மாதங்களாக பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆபாச வீடியோ இணையதள முகவரியை அனுப்பி ஆபாச காட்சிகளை பார்க்கும் போது ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பும்படியும் தொல்லை கொடுத்திருக்கிறார். ஆசிரியரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி, பள்ளியில் வைத்து ஆசிரியரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்துள்ளார், அதன் பின்னரும் அடங்காமல் தொல்லை கொடுப்பதை தொடர்ந்துள்ளார் சகாயம். இதையடுத்து சக மாணவிகள், மாணவர்களிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார் அந்த மாணவி..!

இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த ஆசிரியரின் செல்போனை பிடுங்கிய மாணவர்கள், அதனை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்து உள்ளனர். இதனை பார்த்த பள்ளி தலைமையாசிரியர் , இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடமோ , காவல் நிலையத்திலோ புகாரளிக்காமல், அந்த ஆசிரியரை பெயருக்கு கண்டித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த மாணவர்கள் சிலர் காவல்துறையின் அவசர எண் 100-ஐ தொடர்புகொண்டு நடந்தவற்றை தெரிவித்திருக்கிறார்கள். பள்ளிக்கு சென்ற முதலியார்பேட்டை போலீசார், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்குத் தகவல் அளித்து விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு வைத்து விலங்கியல் ஆசிரியரிடமும் மாணவியிடமும் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது

கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்த அவர் வாட்ஸ் அப்பில் செய்த மிரட்டல் சேட்டைகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளது. மாணவிக்கு அனுப்பி உள்ள வாட்ஸ் ஆப் குறுந்தகவலில் என்னை அடித்துவிட்டாய் அல்லவா இனிமேல் யாரிடமும் சொல்ல முடியாத அளவு, உன் பிரென்ட் கிட்டகூட சொல்லமுடியாத அளவு உன்னிடம் நடந்துகொள்வேன் என மிரட்டியுள்ள சகாயம், உங்க வீட்ல சொல்லியும் நம்பல இல்ல, இனிமேல் யாருகிட்ட போய் சொல்லுவ ?

என்ன ஸ்ரீமதி கேஸ் மாதிரி ஏதாவது பண்ணலாம்ன்னு ஐடியா வா? ம்ம் சொல்லு அப்படி ஏதாவது ஐடியாவா ? எனவும் இன்னும் கொஞ்சம் கொஞ்சமா வெளிவரும் எனவும் மிரட்டி உள்ளார். இதற்கு மாணவி நான் அப்படிப்பட்ட பெண் அல்ல என கெஞ்சியும் அவர் வாட்ஸ் அப் சாட்டிங் மூலம் ஆசைக்கு இனங்குமாறு மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணையின் முடிவில் கண்டமங்கலத்தை சேர்ந்த விலங்கியல் ஆசிரியர் சகாய தோனி வளவனை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

ஆசிரியரின் ஆபாச சாட்டிங் வெளியான நிலையில் பல்வேறு சமூக அமைப்பினர், பள்ளியின் தாளாளரை முற்றுகையிட்டு விலங்கினும் கீழாய் நடந்து கொண்ட விலங்கியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது வேண்டும் என்றும் அனைத்து மாணவ மாணவிகளிடமும் ஆசிரியர் குறித்து விரிவான விசாரணை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.