டெல்லி: நடைபெற்று முடிந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக 2ஜி அலைக்கற்றை ஏல முறைகேட்டில் சிக்கிய திமுக எம்.பி. ஆ.ராசா புகார் கூறி உள்ளார்.
இந்தியாவின் அதிவேக 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் பணி கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், முடிவுக்கு வந்தது. இதில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது. இந்த ஏலத்தில், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் பங்குபெற்றன. முதல் நாள் ஏலத்திலேயே, இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டன.
1லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், மொத்தம் 72 ஆயிரத்து 98 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஏலத்தில், 7சதவீதம் அதாவது 51ஆயிரத்து 236மெகா ஹெர்ட்ஸ் விற்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், 5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் அஸ்விணி வைஷ்ணவ் கூறினார்.
இந்த ஏலத்தில், அதிக தொகை கொடுத்து 5ஜி உரிமத்தை ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. 700 மெகாஹெர்ட்ஸ், 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ், 26 கிகாஹெர்ட்ஸ் உள்ளிட்ட அலைவரிசைகளை கைப்பற்றியிருக்கும் ஜியோ, இதற்காக 88 ஆயிரத்து 78 கோடி ரூபாயை செலவு செய்யவுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனமும் 43 ஆயிரத்து 84 கோடி ரூபாய்க்கு, 900 முதல் 3 ஆயிரத்து 300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை ஏலம் எடுத்துள்ளது.
அதானி குழுமம் 400 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை கையகப்படுத்த, 212 கோடி ரூபாயை செலவு செய்யவுள்ளது.
இந்த நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்குதான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று மத்தியஅரசு தான் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.