"ராணுவத்துல இருக்கேன். இப்ப செஸ் விளையாட வந்திருக்கேன்!"- ராணுவ உடையில் உலா வந்த பௌலா ரோட்ரிக்ஸ்

சென்னை சர்வதேச செஸ் தொடரில் அனுதினமும் புதிய புதிய விஷயங்களைக் கவனிக்க முடிகிறது. நேற்று அப்படி நம் புகைப்படக் கலைஞர்களின் கேமராக்கண்களில் சிக்கியவர் கொலம்பியாவின் பௌலா ரோட்ரிக்ஸ். இவர் நேற்று தன் நாட்டின் ராணுவ உடையில் செஸ் விளையாட வந்திருந்தார். அந்நாட்டின் ராணுவத்திலும் பணிபுரிந்து வருகிறார். போட்டியை முடித்துவிட்டு, தான் தங்கியிருக்கும் அறைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தவருடன் பேசியதிலிருந்து…

ராணுவத்துல என்னவா இருக்கீங்க?

“பள்ளிப் படிப்பை முடிச்சதும் ராணுவத்துல சேர்ந்துட்டேன். அதுக்கு அப்புறம் நாலு வருஷம் ராணுவம்தான். நாலு வருஷம் பணியாற்றினா, இரண்டாம் லெப்டினன்ட் அப்படிங்கற பொறுப்பு கிடைக்கும். அதுக்கு அப்புறம் புரொமோஷன்ல லெப்டினன்ட் ஆகலாம். நான் இப்ப லெப்டினன்ட்டா இருக்கேன். 15 வயசுல இருந்து எனக்கு ராணுவம்தான் கனவா இருந்துச்சு. இப்ப பத்து வருஷமா ராணுவத்துல இருக்கேன்.”

சோபியாவுடன் பௌலா ரோட்ரிக்ஸ்

எப்போ இருந்து செஸ் விளையாடறீங்க?

“ஆறு வயசுல இருந்து செஸ் விளையாடிக்கிட்டு இருக்கேன். கொலம்பியா அணிக்காக விளையாடறேன். இது என்னோட நான்காவது ஒலிம்பியாட். 2200 ரேட்டிங் வச்சிருக்கேன். இண்டர்நேஷனல் மாஸ்டரா இருக்கேன். இப்ப பெருசா செஸ்ல பயிற்சி எடுக்கறது இல்ல. இந்தத் தொடருக்காக இப்ப இந்தியா வந்திருக்கேன்.”

குடும்பம் பத்திச் சொல்லுங்க?

“அப்பா பேரு ஃபெர்னாண்டோ. அம்மா பேர் அனம். கொலம்பியா தலைநகரமான பொகோட்டாலதான் (Bogotá) அவங்க வசிக்கிறாங்க. என்னுடைய பாய் பிரெண்டும் ராணுவத்துலதான் இருக்கார். அவர் என்னோட உயர் அதிகாரி. அவரோட பேர் ஹுலியன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. பேரு சோபியா.”

Paula Rodriguez

அதென்ன யூனிஃபார்மோட விளையாட வந்திருக்கீங்க?

“நாளையிலிருந்து யூனிஃபார்ம் போட மாட்டேன். இன்னிக்குதான் கடைசி. சும்மா ஆசைக்குப் போட்டுட்டு வந்தேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.