குமரி டு காஷ்மீர்: பாதியில் முடிந்த லட்சியப் பயணம்… சோகத்தில் ஆழ்த்திய ஸ்கேட்டிங் ஆர்வலர் விபத்து!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், வெஞ்ஞாறமூடு அருகேயுள்ள புல்லம்பாற அஞ்சாம்கல் பகுதியைச் சேர்ந்த அலியார் குஞ்ஞு – ஷைலா பீவி தம்பதியின் மகன் அனஸ் ஹஜாஸ் (30). ஸ்கேட்டிங் சாகசம் செய்வதில் மிகுந்த ஆர்வம்கொண்டவர். இந்த நிலையில், புதிதாகச் சாதிக்க எண்ணிய அனஸ் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சாகசப் பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார். அதன்படி கடந்த மே மாதம் 29-ம் தேதி கன்னியாகுமரியில் தன்னுடைய சாகசப் பயணத்தைத் தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து மதுரை, பெங்களூர், ஹைதராபாத் வழியாகப் பயணித்தார் அனஸ் ஹஜாஸ். இந்த நிலையில், அண்மையில் தன்னுடைய நண்பர்களிடம் போனில் பேசிய அனஸ், “மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் தாண்டி ஹரியானா மாநிலத்தை அடைந்திருக்கிறேன். இன்னும் சுமார் 15 நாள்களில் காஷ்மீரை அடைந்து என்னுடைய சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

லாரி மோதி மரணமடைந்த அனஸ் ஹஜாஸ்

ஓவ்வொரு முக்கிய இடத்தைக் கடக்கும்போதும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை சாலை விபத்தில் அனஸ் மரணமடைந்தார். அனஸ் ஹஜாஸின் மொபைல் போனில் அவர் நண்பரிடம் விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “ஹரியானா மாநிலம், பஞ்சகுலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதியதால் அனஸ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அனஸ் ஹஜாஸின் உடல் இங்கு ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உறவினர்கள் அனஸ் ஹஜாஸின் உடலைப் பெறுவதற்காக ஹரியானாவுக்குச் சென்றிருக்கின்றனர்.

மரணம்

கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்த அனஸ் ஹஜாஸ் டெக்னோ பார்க்கிலும், தனியார் ஸ்கூலிலும் பணிபுரிந்திருக்கிறார். யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்தவர், ஸ்கேட்டிங் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணத்தைத் தொடங்கினார். தன் லட்சியத்தை எட்டிப்பிடிக்க இருந்த சமயத்தில் மரணத்தைத் தழுவியிருக்கிறார். அனஸ் ஹஜாஸின் மரணம் ஸ்கேட்டிங் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.