டெல்லி: உண்மையான சிவசேனா கட்சி எது என்பது தொடர்பான வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கையில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்ற தாங்களே உண்மையான சிவசேனா கட்சி என்று உரிமை பாராட்டி வருகிறார் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டிய உத்தவ் தாக்கரே, எதிரணிக்கு சென்ற 16 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது உத்தவ் தாக்கரே அணியில் இருந்து பிரிந்த எம்.எல்.ஏக்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது என்று ஷிண்டே தரப்பு வாதிட்டது. இந்த கருத்தை ஏற்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. அதேநேரம் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது என்று உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கை வைத்தது. நாங்களே உண்மையான கட்சி என்று யார் உரிமை கோரினாலும் சட்டவிதிகளின்படி செல்வோம் என்று தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். முத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிவசேனா தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா? வேண்டாமா? என்பது குறித்து திங்கட்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.
