குழந்தைகள் என்றாலே குறும்புகளுக்குப் பஞ்சமிருக்காது. அவர்களை எங்காவது வெளியில் கூட்டிச் செல்லும்போது அவர்கள் மீது கூடுதல் கவனம் தேவை. கண் இமைக்கும் நேரத்தில் சேட்டை செய்து கீழே விழுந்து, ‘என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா’ என்பதுபோல் அவர்களது குறும்புத்தனங்கள் நீளும். இது சாதாரணமாக அனைத்து வீடுகளிலும் நிகழும் ஒன்றுதான்.

இதேபோல ஒரு சம்பவம் தான் சீனாவில் நிகழ்ந்துள்ளது. டிராஃபிக் சிக்னலில் கார்கள் நின்றிருக்க, ஒரு காரின் ஜன்னலில் இருந்து குழந்தை ஒன்று கீழே விழுகிறது. கீழே விழுந்ததும் கால்களை சிறிது நேரம் உதைத்தபடியே அந்தக் குழந்தை படுத்திருக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை வந்த கார் அங்கிருந்து வேகமாகச் சென்று விடுகிறது.
சுற்றிலும் மற்ற வாகனங்களில் இருந்து இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள், பதைபதைக்க ஓடிவந்து அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலையின் ஓரத்திற்குச் செல்கின்றனர். பின்னர் அந்தக் குழந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதற்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் டிராஃபிக் சிக்னலில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாயின.
45 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சி, காண்பவரை திடுக்கிட வைக்கிறது. இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சிலர் பெற்றோரின் கவனக் குறைவை குறை சொல்லியும் மற்றும் சிலர் அந்தக் குழந்தை தானாக விழவில்லை, காரின் உள்ளேயிருந்து யாரோ ஒருவர் அந்தக் குழந்தையைத் தள்ளி விடுவது போல் உள்ளது, இல்லையென்றால் ஏன் அந்த கார் நிற்காமல் செல்ல வேண்டும் எனவும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
Heights of Careless parents.#China – Child falls out of #car window in Ningbo, China. pic.twitter.com/rowxkQL62P
— Siraj Noorani (@sirajnoorani) August 3, 2022
எது எப்படி இருந்தாலும் குழந்தைகள் இருக்கும்போது, மனதில் இருக்கும் மற்ற சிந்தனைகளை ஓரம் கட்டிவிட்டு, அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
நீங்களே இந்த வீடியோவை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், குழந்தை காரிலிருந்து தானாக விழுந்ததா அல்லது தள்ளிவிடப்பட்டிருக்கிறதா?