சென்னை: கன மழையின்போது தேடல், மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளின் 11 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட்4-ம் தேதி வரை 25.63 செ.மீ. மழைபெய்துள்ளது. இது இயல்பைவிட 99 சதவீதம் அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கனமழை, அதிகனமழை பெய்துள்ள பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நீலகிரி,திருச்சியில் மொத்தம் 49 முகாம்களில் 4,035 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துதரப்பட்டுள்ளன.
வரும் 8-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.80 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று, உரியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கண்காணிப்பு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 89,692 செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம்.
கன மழையின்போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 2 குழு, நீலகிரி மாவட்டத்தில் 2 குழு, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குழு என மொத்தம் 110 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
திருச்சி, ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 238 வீரர்களைக் கொண்ட 6 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.