தமிழகத்தில் ரயில்வே ஒப்புதலுடன் 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் செயல்படவுள்ளது: மத்திய அரசு

புதுடெல்லி: ” 2022 ஏப்.1-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14,190 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 1234 கிமீ நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் ரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது” என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, “ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக நாள்தோறும் 15 முதல் 45 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாக வருகின்றனவா? தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ஒற்றை வழிப் பாதைகளின் எண்ணிக்கையைக் கண்டறிய ரயில்வே ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியதா?

அப்படிப்பட்ட ரயில் நிலையங்களில், குடிநீர் வசதிகள், வாகன நிறுத்துமிடம் இல்லாமை, சுகாதாரமற்ற கழிவறைகள், போதிய பணியாளர்கள் இல்லாதது போன்ற அடிப்படைக் கட்டமைப்புப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின், நிலைமையை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் இரட்டைப் பாதையை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?” என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில்: “ஒற்றை வழிப் பாதைப் பிரிவுகளில் இயக்கப்படும் ரயில்கள் உட்பட இந்திய ரயில்வேயில் உள்ள ரயில்கள், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பட்டியலிடப்பட்டு, அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, ரயில்களின் ஒற்றைப் பாதை என்பது காரணமாக இருக்க முடியாது.

நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்குவது ரயில்வேயின் முயற்சியாகும். தேவையை நிறைவு செய்ய தமிழகத்தின் ஒற்றை வழி ரயில் பாதைகள் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச குடிநீர் வழங்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேவை மற்றும் அனுசரணையின் அடிப்படையில் மேலே உள்ள ஒற்றை வழி ரயில் பாதைகளில் சாத்தியமான அனைத்து இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரயில் பாதைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே திட்டங்கள் பல்வேறு மாநில எல்லைகளில் பரவி இருப்பதால், ரயில்வே திட்டங்கள் மண்டல வாரியாக ஒப்புதல் கொடுத்து எடுக்கப்படுகின்றன. திட்டங்களின் வருமானம், நெரிசலான மற்றும் நிறைவுற்ற பாதைகளின் அதிகரிப்பு, ரயில்வேயின் சொந்த செயல்பாட்டுத் தேவை, வள ஆதாரங்களின் இருப்பு, ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் திட்டம் மற்றும் ஒட்டுமொத்த நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இரட்டைப் பாதை அமைக்கப்படுகிறது.

01.04.2022 நிலவரப்படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14190 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 1234 கிமீ நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் ரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.