சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.26 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியன், பைனான்ஸ், திரையரங்கம், ஹோட்டல் உட்பட பல தொழில்களை செய்து வருகிறார். மதுரையில் குடும்பத்துடன் வசித்து வந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார். மருது, ஆண்டவன் கட்டளை, தங்கமகன், வெள்ளக்காரத்துரை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் சிறு வணிகர்களுக்கு கடன் கொடுக்க தொடங்கிய இவர், பின்னர் படிப்படியாக சினிமா துறையினருக்கு கடன் கொடுப்பவராக வளர்ந்தார். மேலும், அதிமுகவிலும் செல்வாக்கு பெற்றிருந்தார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
இந்த தகவலையடுத்து, மதுரை காமராஜர்புரத்தில் உள்ள அன்புச்செழியன் வீடு, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள கோபுரம் ஹோட்டல், செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் பிலிம்ஸ் சினிமா தியேட்டர், தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அழகர்சாமியின் வீடு மற்றும் சென்னை நுங்கம்பாக்கம், தியாகராயநகரில் அன்புச்செழியன் மற்றும் அவரது தம்பி அழகர்சாமிக்கு சொந்தமான இடங்கள், வேலூர், கோவை என அன்புச்செழியனுக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடையவர்களின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், குறிப்பாக அன்புச்செழியனிடம் பணம் பெற்று படத்தயாரிப்பில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணுவின் தியாகராயநகரில் உள்ள அலுவலகம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு, எஸ்.ஆர்.பிரபுவின் தேனாம்பேட்டையில் உள்ள வீடு, தியாகராயநகரில் உள்ள ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் அலுவலகம், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்ய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜனின் அலுவலகம் மற்றும் முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்களின் இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து 3 நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை, முதலீடு ஆவணங்களை வருமான வரிதுறையினர் கைப்பற்றி, அந்த ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அன்புச்செழியன், சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்களின் அலுவலகங்களில் 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அன்புச்செழியன் மற்றும் அவரது தொடர்பில் இருந்தவர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த தேடுதலின்போது முக்கிய ஆவணங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்த ரகசிய இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கணக்கில் வராத பணக் கடன்களை வழங்கியது தொடர்பான உறுதிமொழி பத்திரங்களும் கிடைத்துள்ளன. திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் கணக்கு புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட, திரைப்படங்கள் வெளியானதில் இருந்து அவர்கள் பெறப்பட்ட உண்மையான தொகை அதிகமாக இருப்பதும், கணக்கில் காட்டப்படாத வருமானம், முதலீடுகள் மூலம் பல்வேறு கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் இந்த சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல சான்றுகள் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது. இதேபோல், திரைப்பட விநியோகஸ்தர்களின் இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் படி, திரையரங்குகளில் இருந்து வசூலாகி கிடைக்கும் வருவாயை குழுவாக சேர்ந்து விநியோகஸ்தர்கள் திட்டமிட்டு மறைத்துவிடுகின்றனர். இதன் மூலம் உண்மையான வருமானம் மறைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.200 கோடிக்கு மேல் கணக்கில்வராத வருவாய் மறைக்கப்பட்டிருப்பது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் வராத ரூ.26 கோடி பணம் மற்றும் கணக்கில் வராத ரூ.3 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.