அமைச்சர் நாசர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி?

பால்வளத் துறை அமைச்சர் நாசர் மீது, முதலமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்தே, தன் மீதும், தனது தலைமையிலான அரசு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வந்து விடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமாக உள்ளார். எனினும், அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு வந்துக் கொண்டே இருக்கிறது. இது போதாது என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, வாரந்தோறும் ஏதாவது ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

இந்நிலையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசரின் பெயர், கடந்த சில நாட்களாக செய்திகளில் வலம் வந்த வண்ணம் உள்ளன. ஆவின் பால் பாக்கெட்டுகளில் முறைகேடு, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் செய்வதற்காக ஆவின் கவர்களில் முறைகேடு என, பல குற்றச்சாட்டுகள் அமைச்சர் நாசர் மீது கூறப்படுகின்றன.

அண்மையில், ஆவின் அரை லிட்டர் பால் பாக்கெட்டில், 430 மில்லி லிட்டர் என்ற அளவுக்கே பால் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் முக்கியமான பாலில் திமுக ஊழல் செய்து வருவதாக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்த விவகாரம் முடிவடைதற்குள், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் செய்வதற்காக ஆவின் கவர்களில் முறைகேடு நடந்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவின் பால் பாக்கெட் கவர்களில் ஒலிம்பியாட் விளம்பரத்தை அச்சிடுவதற்கு முறையாக டெண்டர் விடாமல் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு அதிக மதிப்பீட்டில் தமிழக அரசு வழங்கி உள்ளதாக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கையில் எடுத்துக் கொண்டு, தினசரி அமைச்சர் நாசர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் அவர் பதவி விலக வேண்டும் என, அண்ணாமலை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆவின் பால், விளம்பரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால், பால்வளத் துறை அமைச்சர் நாசர் மீது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தினசரி பேசி வருவதால், திமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் உடன்பிறப்புகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.