பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டம் முடிந்த கையோடு இருவரும் தங்கள் படங்களில் ஷூட்டிங்கில் பிஸியாகத் தொடங்கிவிட்டனர்.
`பிரம்மாஸ்திரா’ படத்தின் டிரெய்லர், புரொமோஷன் என இவர்களின் ஷெட்டியூல் முழுமையாக நிரம்பி இருந்தது. ஆலியா தனது முதல் ஹாலிவுட் படத்திற்கான படப்பிடிப்புக்கு லண்டன் சென்றார். இதையடுத்து ரன்பீர் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “எங்கள் குழந்தை… விரைவில்” என்கிற கேப்ஷனோடு பதிவிட்டு ஆலியா பட் அம்மாவாகப் போகிறார் என்ற நற்செய்தியை அறிவித்தார். அதில் இருவரும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் திரையில் தங்கள் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதே சமயம் ஆலியா பட்டுக்கு இப்போது எதற்கு திடீரென்று திருமணம் என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆலியா, திடீரென்று திருமண முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர், “நான் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதால் என்னை அதிலேயே இழக்க நேரிடுமோ என்று நினைத்தேன். அதனால்தான் எனது தனிப்பட்ட வாழ்வில் திடீரென்று முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படித்தான் திருமணம் செய்துகொள்ளும் முடிவை நான் எடுத்தேன். இப்போது எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. நிறையப் பேர் ‘இப்போது எதற்குத் திருமணம்’ என்று கேட்கிறார்கள்.

நான் சுமார் 12 வருடங்களாகத் திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சோர்ந்து போகலாம் அல்லது பாதிக்கப்படலாம். அப்படி இந்தப் பணியில் என்ன நடந்தாலும் அது உங்கள் நம்பிக்கையை இழக்க வைத்துவிடும். இது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்பதை நினைவூட்ட நம்முடன் ஒருவர் இருக்க வேண்டும். நான் கதைகளை உயிர்ப்பித்து மக்களை மகிழ்வித்தேன். ஆனால் பொழுதுபோக்கு, கதைசொல்லல் மட்டுமே எனது ஒரே சிந்தனையாக, வாழ்க்கையாக மாறுகிறது. எனது வேலையையும் தாண்டி எனக்கென்று ஒரு சொந்த அடையாளம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால்தான் இந்தத் திருமணம்!” என்று கூறியிருக்கிறார்.