தரவு பாதுகாப்பு மசோதா வாபஸ் ஏன்? – மத்திய அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் விசிக எம்பி!

தரவு பாதுகாப்பு மசோதா:
கணினிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட இன்றைய இன்டர்நெட், டிஜிட்டல் யுகத்தில் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை கணினி மற்றும் இணைய நிறுவனங்கள் திருடாமல் தடுக்கும் நோக்கில் 2019 இல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனை:
ஆனால் அந்த மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதில் முக்கியமாக இந்த சட்டத்தின் பயன்பாட்டிலிருந்து எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்கு அளிப்பது போன்ற அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளதென மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி அதற்கு தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அதனையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

பரிந்துரை:
அனைத்து சமூக ஊடக நிறுவனங்களையும் வெளியீட்டாளர்களாகக் கருதுவது, அவர்களின் தளங்களில் உள்ள உள்ளடக்கத்திற்கு அவர்களையே பொறுப்பேற்க வைப்பது, தொழில்நுட்பத்தை கையாளும் நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் அமைக்காத வரையில், எந்தவொரு சமூக ஊடக நிறுவனத்தையும் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட SWIFT கட்டண முறைக்கு மாற்றாக இருக்கும் உள்நாட்டு கட்டண முறையை அமைப்பது என்பன போன்ற பல்வேறு பரிந்துரைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

வாபஸ்:
இந்த நிலையில், தகவல் பாதுகாப்பு மசோதா 2021 வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு மக்களவையில் அண்மையில் தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அளித்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் புதிய மசோதாவை கொண்டு வர அரசு முடிவு செய்திருப்பதால் இந்த மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்திருந்தார். அத்துடன், இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

எம்பி கேள்வி:
இதனிடையே, தகவல் பாதுகாப்பு மசோதா 2021 ஐ மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றது தொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் இன்று கடிதம் அனுப்பி உள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. ஒன்றிய அரசு இதற்கென முன்மொழிந்துள்ள விரிவான சட்டக் கட்டமைப்பின் கூறுகள் என்ன?

2. விரிவான சட்டக் கட்டமைப்பில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதா?

3. தரவுப் பாதுகாப்பிற்கான சட்டமியற்றும் கட்டமைப்பைத் திருத்துவதற்கு அரசு பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளதா?

4. தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, 2019 இல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகள் மீது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வெள்ளை அறிக்கையை ஐடி அமைச்சகம் வெளியிடுமா? என பல்வேறு கேள்விகளை எம்பி ரவிக்குமார் அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.