இந்தியா-பாகிஸ்தான் என்றாலே எதிரும் புதிருமான நாடு என்றும் இந்தியர்களும் பாகிஸ்தானும் பரம்பரை பகைவர்கள் போன்றும் நம் தலைமுறைகள் வளர்க்கப்பட்டுவிட்டனர்.
இந்தியாவில் இருந்து பிரிந்த ஒரு நாடுதான் பாகிஸ்தான் என்றும், அந்நாடு ஒரு சகோதரத்துவ நாடு என்று நினைப்பதற்கு இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களால் முடியவில்லை. இதற்கு சில கசப்பான அனுபவங்களும் காரணம் என்பது உண்மை.
இந்திய, பாகிஸ்தான் உறவு பல ஆண்டுகளாக சிக்கலில் இருக்கும் நிலையில் இந்திய தொழிலதிபர் ஒருவர் பாகிஸ்தான் தோழியுடன் தனது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிகழ்வு குறித்து நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சினேகா பிஸ்வாஸ்
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வசிப்பவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான எண்ணங்கள் பல உள்ளன என்றும், மக்கள் தங்கள் அண்டை நாட்டில் உள்ள குடிமக்களை நன்றாக அறிந்து கொள்ளும்போது தவறான புரிதல் உடைக்கப்படுகிறது என்றும் இந்தியாவின் இயர்லி ஸ்டெப்ஸ் அகாடமி என்ற நிறுவனத்தின் சிஇஓ சினேகா பிஸ்வாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்
இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளரும் போது பாகிஸ்தான் பற்றிய எனது கருத்து கிரிக்கெட் மற்றும் ஊடகங்களின் எதிர்மறையான செய்திகளில் மட்டுமே இருந்தது. இந்தியாவின் பரம்பரை பகை நாடாகவே பாகிஸ்தான் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. பாகிஸ்தான் மீது வெறுப்பை செலுத்தும் வகையில் தான் அனைத்து நிகழ்வுகளும் இருந்தன.

பாகிஸ்தான் தோழி
ஆனால் இந்த பாகிஸ்தான் பெண்ணை நான் சந்தித்த உடன் எனது எண்ணம் முழுவதுமாக மாறிவிட்டது. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியை சேர்ந்த இந்த பெண்ணை நான் முதல் முதலாக சந்தித்த போது எனக்கு மிகவும் பிடித்தது. முதல் செமஸ்டர் முடிவதற்குள் நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம் என்று சினேகா தனது நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நட்பு
ஒருவருக்கொருவர் நாங்கள் காபி, பிரியாணி ஆகியவற்றை பகிர்ந்து கொண்டோம் என்றும், பழமைவாத பாகிஸ்தான் குடும்பத்தில் இருந்து வந்தாலும் பெற்றோர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த பெண் தனது தைரியத்தை முன்னெடுத்து ஹார்வர்டில் படிக்க வந்துள்ளார் அவர் தனது தங்கையையும் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்து தெரிந்தது என்றும், அவருடைய அச்சமற்ற நடவடிக்கைகள் மற்றும் சிறப்பான கல்வியால் நான் அவரால் ஈர்க்கப்பட்டேன் என்றும் சினேகா அந்த பதிவில் கூறியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் சுதந்திர தினம்
இந்த நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினமும், ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினமும் கொண்டாடப்படும் நிலையில் நாங்கள் ஒருவருக்கொருவர் தேசியக் கொடிகளை மாற்றி பிடித்து எங்கள் நட்பை வளர்த்து கொண்டோம். பாகிஸ்தான் தேசியக் கொடியை நானும், இந்திய தேசியக் கொடியை அவரும் கையில் பிடித்துக் கொண்டோம் என்றும் எங்கள் உறவு அந்த அளவிற்கு உறுதியாக இருந்தது என்றும் சினேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

நெட்டிசன்களின் ரியாக்சன்
இந்த பதிவை இந்திய-பாகிஸ்தான் நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது முக்கியம் என்றும் நாம் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்களாக இருந்தாலும் மனித இனம் தான் என்றும் சமூகத்தில் இதனை சுட்டிக் காட்டவேண்டும் என்றும் நெட்டிசன் ஒருவர் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளார். நமக்குள் நாமே சுவர்களை கட்டிக் கொண்டோம் என்றும் அந்த சுவரை உடைப்பது நம் கையில் தான் இருக்கிறது என்றும் இன்னொரு நெட்டிசன் கூறியிருந்தார். இருப்பினும் ஒரு சிலர் இந்த பதிவுக்கு தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian CEO’s friendship with Pakistani classmate at Harvard wins hearts
Indian CEO’s friendship with Pakistani classmate at Harvard wins hearts | பாகிஸ்தான் தோழியுடன் சுதந்திர தினம்… இந்திய தொழிலதிபரின் நெகிழ்ச்சியான பதிவு!