வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில், அணு ஆயுத ஆவணங்கள் இருக்கிறதா என்று எப்பிஐ சோதனை நடத்தி வருகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்க்கு புளோரிடா மாகாணத் தின் பாம் பீச் பகுதியில் மர்ரா லாகோ என்ற வீடு உள்ளது. இங்கு அமெரிக்க உளவுத்துறை எப்பிஐ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர். டிரம்ப் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது, சில ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றாரா என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில், இது போன்ற சோதனை நடத்தப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.
இந்நிலையில், டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தியபோது, அணு ஆயுத ஆவணங்கள் தேடப்பட்ட தாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணங்கள் மீட்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
டிரம்ப் வீட்டில் இந்த சோதனையை நடத்த, அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட அட்டர்னி ஜெனரல் மெர்ரிக் கேர்லாண்ட் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் வீட்டில் இருந்து 10 பெட்டிகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களின் பட்டியலை பொதுவில் வெளியிடும்படி அமெரிக்க நீதித் துறை கூறியுள்ளது.
மக்களின் உரிமைகளை பாது காக்க, விசாரணைகள் குறித்து அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் யாருடனும் ஆலோசிப்பதில்லை. ஆனால் தனது வீட்டில் சோதனை நடந்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த திங்கள் கிழமை அறிவித்தார். இந்த சோதனைநடந்தபோது, டிரம்ப் புளோரிடாவில் இல்லை.
டிரம்ப் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொதுவில் அறிவிப்பதற்கு, அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா, இல்லையா என தெரியவில்லை. தற்போது இந்த வழக்கு, அமெரிக்க நீதிபதி ப்ரூஸ் ரேன்ஹார்ட் முன்னிலையில் உள்ளது. இந்தவிவகாரம் குறித்து டிரம்ப் வழக்கறிஞர்கள் எவான் கார்கோரன் மற்றும் ஜான் ரவ்லி ஆகியோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
டிரம்ப் விடுத்துள்ள அறிக்கையில், “எனது வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். நாங்கள் எந்த ஆவணங்களையும் வைத்திருந் தால், அரசு தாங்கள் விரும்பியதை பெற்றிருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.