போடாக்ஸ் சிகிச்சை என்பது என்ன…. அதன் பலன்கள் குறித்து விளக்க முடியுமா?
Karthik, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

Botulinum toxin என்பதன் சுருக்கமே ‘போடாக்ஸ்’. இது க்ளஸ்ட்ரிடியம் (Clostridium) எனும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுவது. இது சுத்திகரிக்கப்பட்ட புரதம். செரிப்ரல் பால்சி, சிலவகை தசை இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஆரம்பத்தில் இது பயன்படுத்தப்பட்டது.
இறுக்கமான தசைகளில் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளில் போடாக்ஸ் ஊசி செலுத்தப்பட்டு, அந்தத் தசைகள் தளர்த்தப்படும்.
மைக்ரேன் தலைவலி பாதிப்புக்கும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நெற்றிப்பகுதிகளின் பக்கவாட்டில் இந்த ஊசியைச் செலுத்தும்போது, அது தசைகளைத் தளர்த்தி, மைக்ரேன் வலியைப் போக்கும்.
அப்படிச் செய்யும்போதுதான், இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது தசையின் சுருக்கங்கள் மறைவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகுதான் இந்த போடாக்ஸ் ஊசி, அழகுத்துறையில் கவனம் பெற்றது.

15 யூனிட் போடாக்ஸ் ஊசியை முகத்தின் சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் (கண்களுக்கடியில், வாயைச் சுற்றி, நெற்றியில்….) செலுத்தும்போது, அந்தச் சுருக்கங்கள் மறையும். ஆனால் இந்தச் சிகிச்சை நம்பகமான மருத்துவர் அல்லது காஸ்மெட்டாலஜிஸ்ட்டிடம் மட்டுமே செய்து கொள்ளப்பட வேண்டும்.
ஏனெனில் கண்கள் போன்ற பகுதிகளில் இந்த ஊசியைச் செலுத்தும்போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். புருவங்களுக்கு மிக நெருக்கத்தில் இந்த ஊசியைச் செலுத்தினால் புருவங்கள் வடிவமிழந்து, தொங்கிப் போக வாய்ப்புகள் உண்டு. புருவங்கள் கண்களையே மறைக்கும் அளவுக்குத் தொய்வடையும் Lid Ptosis எனும் பாதிப்பு வரக்கூடும்.
அதிக உணர்வுகளை, பாவனைகளை முகத்தில் காட்டுவோருக்கு, உதாரணத்துக்கு புருவங்களை அடிக்கடி உயர்த்துவோருக்கு, அதிகம் சிரிப்பவர்களுக்கெல்லாம் சருமத்தில் சீக்கிரமே சுருக்கங்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இளவயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வரும். இவர்களுக்கெல்லாம் போடாக்ஸ் சிகிச்சை பலனளிக்கும்.

18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இதைச் செய்துகொள்ளலாம். அளவுக்கதிகமாகச் செய்வதும் ஆபத்தானது. உதாரணத்துக்கு இந்தச் சிகிச்சையை நடிகர், நடிகைகள் அடிக்கடி செய்து கொண்டால், அவர்களுக்கு முகத்தில் உணர்வுகளை, பாவனைகளைக் காட்டுவது சிரமமாகும்.
எனவே போடாக்ஸ் சிகிச்சையை மேற்கொள்ளும்போது, தகுதியான மருத்துவரின் ஆலோசனையின் பேரில், குறைந்த அளவு யூனிட் மட்டுமே செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது.
முகத்தில் தாடைப் பகுதியில் போடாக்ஸ் சிகிச்சை செய்து கொள்ளலாம். அங்குள்ள தசைகள் மெசீட்டர் மஸில் (Masseter muscle ) என அழைக்கப்படுகின்றன. இந்தத் தசைகள்தான் முகத்தை அகலமாகக் காட்டக்கூடியவை.

இந்தத் தசையில் போடாக்ஸ் ஊசி செலுத்தப்படும்போது, அகலமான அந்தத் தசை சுருங்கி, முகம் சிறியதாகத் தெரியும். கழுத்திலுள்ள சுருக்கங்களைப் போக்கவும் இந்த ஊசி பயன்படுகிறது.
அக்குள் பகுதி, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் அளவுக்கதிக வியர்வை சுரக்கும் ‘ஹைப்பர் ஹைட்ராசிஸ்’ பாதிப்பு உள்ளவர்களுக்கும் போடாக்ஸ் ஊசி பலன் தரும். இது உலகம் முழுவதும் பரவலாகச் செய்யப்படுகிற சிகிச்சை.

போடாக்ஸ் சிகிச்சையால் புற்றுநோய் ஆபத்தெல்லாம் வராது. போடாக்ஸ் சிகிச்சையின் பலன் 4 முதல் 6 மாதங்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு 6 முதல் 8 மாதங்களுக்கொரு முறை இந்தச் சிகிச்சையைத் தொடர வேண்டியிருக்கும். அப்படித் தொடராத பட்சத்தில் சருமம் தன் பழைய நிலைக்கே திரும்பும். சுருக்கங்கள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்குமே தவிர, ஏற்கெனவே உள்ள நிலை மேலும் மோசமாகாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.