புதுடெல்லி: குஜராத் துறைமுகங்களில் கடந்த 5 ஆண்டில் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
குஜராத்தில் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான முந்த்ரா மற்றும் பிபவாவ் துறைமுகங்களில் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் சிக்குவது வழக்கமாகி உள்ளது. இது குறித்து காங்கிரசின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா னேட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘குஜராத் துறைமுகங்களில் கடந்த 5 ஆண்டில் ரூ.2.5 லட்சம் கோடி போதைப் பொருட்கள் சிக்கி உள்ளது. இது குஜராத் மாநிலத்தின் பட்ஜெட்டை விட அதிகம். நாட்டின் போதைப் பொருட்களின் நுழைவாயிலாக குஜராத் மாறி உள்ளது’’ என குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘குஜராத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்வது சுலபமா? பிரதமர் மோடி இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். காந்தி, படேல் வாழ்ந்த இந்த புனித மண்ணில் இந்த விஷத்தை பரப்புபவர் யார்? போதைப்பொருட்கள் திரும்ப திரும்ப பறிமுதல் செய்யப்பட்டபோதிலும் துறைமுகத்தின் உரிமையாளர் இதுவரை விசாரிக்கப்படாதது ஏன்? அமலாக்கத்துறை, சிபிஐ, போதைப் பொருள் தடுப்பு படையினர் விசாரிக்காதது ஏன்? குஜராத்தில் ஆட்சியில் அமர்ந்து மாபியா நண்பர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் யார்? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எத்தனை காலம் அமைதியாக இருப்பார். இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.