கரூர் புத்தகத் திருவிழா | ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் தகவல்

கரூர்: கரூர் புத்தகத் திருவிழாவில் ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன, 1.35 லட்சம் பேர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டுள்ளனர் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் த.பிரபுசஙகர் இன்று (ஆக. 30) கூறியதாவது: “கரூர் மாவட்ட நிர்வாகம் பப்பாசியுடன் (புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்) இணைந்து நடத்திய கரூர் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கி நேற்று வரை 11 நாட்கள் நடைபெற்றது.

இதில் 115 அரங்குகளில் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. மாற்றுத்திறனாளிகள் கண்காட்சியை எளிதில் பார்வையிடும் வகையில் சக்கர நாற்காலி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பள்ளி மாணவ, மாணவிகள் 50,000 பேர், கல்லூரி மாணவ, மாணவிகள் 10,000 பேர், பொது மக்கள் 75,000 பேர் என மொத்தம் 1.35 லட்சம் பேர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டுள்ளனர்.

புத்தகத் திருவிழாவில் ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. கூடுதலாக ரூ.25 லட்சத்திற்கு அரசுப் பள்ளிகள், கிராமப்புற அறிஞர் அண்ணா நூலகங்களுக்கு குழந்தைகள், கிராமப்புறங்கள் தேவையான நூல்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கும் வகையில் கொடை நூல் கொத்தளம் என்ற திட்டத்தில் ரூ.1,75,473 மதிப்புள்ள 3,293 புத்தகங்களை கொடையாளர்கள் வழங்கியுள்ளனர். கொடையாளர்களுக்கு ஆட்சியர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் 3,960 பேருக்கு நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் 10 வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மரக்கன்று நட்டு பராமரிப்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் பட்டிமன்றம், இசை, நடன, சொற்பொழிவு நடைபெற்றன. இவற்றை நாள்தோறும் சுமார் 2,000 பேர் கண்டு ரசித்தனர். கடந்த 26ம் தேதி இரவு 1 மணி நேரத்தில் 68 மி.மீட்டர் மழை பெய்தது. கரூர் மாவட்ட ஆகஸ்ட் மாத சராசரி மழைப்பொழிவு 50 மி.மீட்டர். ஆனால் 1 மணி நேரத்திலே 68 மி.மீட்டர் மழை பெய்தது.

மழை வெள்ளம் உட்புகுந்து 6 அரங்குகளில் உள்ள நூற்றுக்கும் குறைவான புத்தகங்களே சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ.24,000. சுமார் 40,000 பார்வையாளர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அனைத்துமே புத்தகத் திருவிழாவை பாராட்டியே தெரிவித்துள்ளனர்” என்று ஆட்சியர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.