ஓ.பி.எஸ்-க்கு வரவேற்பு; இ.பி.எஸ் அணிக்கு எதிராக கோஷம்: பூலித்தேவர் பிறந்த நாள் காட்சிகள்

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் 307வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு தேனியில் இருந்து தென்காசிக்கு சாலை மார்க்கமாக சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், இ.பி.எஸ். அணிக்கு எதிராக கோஷம் எழுப்பியது கவனத்தைப் பெற்றுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாள் விழாவையொட்டி பூலித்தேவன் சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாளில் அவருக்கு வணக்கங்களை செலுத்துக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி காலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். “மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 1) தென்காசி மாவட்டம் நெற்கட்டான் செவலில் உள்ள அவருடைய முழு உருவ வெண்கலச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சுதந்திரப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 307வது ஜெயந்தி விழாவில் பங்கேற்று பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தேனியில் இருந்து தென்காசி மாவட்டம், நெற்கட்டான் செவலுக்கு சாலை மார்க்கமாக காரில் சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம், அலகாபுரி என்ற பகுதியில், ஓ.பி.எஸ். ஐ வரவேற்ற அவருடைய ஆதரவாளர்கள் மேளதாளம் முழங்க அவருக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவருடைய தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கூடி ஓ.பி.எஸ்-ஐ வரவேற்றனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் வழிவிடும் முருகன் கோயிலில் சாமி கும்பிட்டார். அங்கே அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசியில் மணமக்கள் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் வழிநெடுக அதிமுக தொண்டர்கள், தன்னுடைய ஆதரவாளர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு நெற்கட்டான் செவலுக்கு சென்று மாவீரன் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனிடையே, பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, தகுதி இல்லாதவர் பூலித்தேவனுக்கு மாலை அணிவிக்க கூடாது என முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஒரு தம்பதியினர் கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோஷமிட்ட இருவரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கோஷமிட்டதாக தம்பதி விளக்கம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

இப்படி, மாவீரன் பூலீத்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற ஓ.பி.எஸ்.க்கு வழிநெடுக தொண்டர்களின் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே நேரத்தில், இ.பி.எஸ் அணிக்கு எதிர்ப்பும் என பூலீத்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாட்ட காட்சிகள் நடந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.